கஜா புயலில் பாதிக்கப்பட்டு உடைந்து நாசமான வீடுகளை உடனடியாக சீரமைக்க முடியாததால் வீட்டின் மேற் கூரைகளில் தென்னை பச்சை ஓலைகளை தொங்கவிட்டு நிழல் தேடுகின்றனர் விவசாயிகள்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் கஜா புயல் தாக்கியதால் பல லட்சம் மரங்களும், பல ஆயிரம் மின்கம்பங்களும் உடைந்து நாசமானது. கதற்றின் வேகமும், மரங்களும், மின்கம்பங்களும் விழுந்து பல ஆயிரம் ஓட்டு வீடுகள், கூரை வீடுகளும் உடைந்து நாசமானது. அந்த வீடுகளில் குடியிருந்தவர்கள் தங்கள் குழந்தைகளை மார்போடு அணைத்து மழையும், காற்றும் முடியும் வரை வீட்டின் ஓரத்தில் காத்திருந்து வெளியே வந்தனர். இப்படி உடைந்த வீடுகளுக்குள் இருந்த அத்தனை பொருட்களும் சேதமடைந்தது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளை உடனடியாக சீரமைக்க எந்த வசதியும் இல்லாத நிலையில் விவசாயிகள் பொதுமக்கள் தவித்து வந்த நிலையில் ஓட்டை வீடுகளை மறுபடியும் மழைத் தண்ணீர் பாதிப்பை தடுக்க தொண்டு நிறுவனங்களும், தன்னார்வளர்களும் கொடுத்த தார் பாய்களை வீடுகளில் கட்டி நிழல் தேடிய பொதுமக்கள் தற்போது அணவயல், ஆண்டவராயபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தங்கள் வீடுகளில் மேற்கூரையை பாதுகாக்கவும், நிழலுக்காகவும் தோட்டங்களில் ஒடிந்து கிடக்கும் தென்னை மரங்களிலிருந்து பச்சை ஓலைகளை வெட்டி வந்து வீட்டின் மேல் தொங்கவிட்டுள்ளனர். இதனால் சில நாட்கள் நிழல் கிடைக்கும் என்கின்றனர் விவசாயிகள்.