
ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.அப்போது ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வடுகபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெருமாள் என்பவர்மண்வெட்டியுடன் வந்து மனு கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் வடுகப்பட்டி கிராமத்தில் ஒன்றவை ஏக்கர் விவசாய நிலம் தமிழக அரசு பூமிதான வாரியத்தின் மூலம் கடந்த 1989 ஆம் ஆண்டு எனது தந்தைக்கு வழங்கப்பட்டது. நான் எனது தந்தை மற்றும் குடும்பத்துடன் மேற்கண்ட நிலத்தில் குடிசை அமைத்து விவசாயம் செய்து வருகிறோம். மழைக்காலங்களில் மானாவாரி பயிர் சோளம், கொள்ளு சாகுபடி செய்து வருகிறோம். ஆண்டதோறும் கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு செய்து சான்று வழங்கியுள்ளார். நிலவரியும் செலுத்தி வருகிறோம்.
தற்போது எங்கள் நிலம் அருகே இருப்பவர் எங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே விவசாய நிலத்தை சர்வே செய்து நில அளவீடு செய்து தர வேண்டும் என்று ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை இதனால் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன். எனவே விரைவில் சர்வீஸ் செய்து நில அளவீடு செய்ய வேண்டும் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.