
உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்தப் போட்டியில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதனை உலக ரசிகர்களே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். விளையாட்டு போட்டியை காண இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆகியோர் வர உள்ளனர். இறுதிப் போட்டிக்காக பல்வேறு ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் தொடங்கிய இந்தியா - ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டியை எதிர்கொள்ள உள்ளது.
இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் உள்ள பிரமாண்ட சிவன் சிலை முன்பு திரண்ட கிரிக்கெட் ரசிகர்கள் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டதுடன் மெய்நின்றநாத சுவாமி ஆலயத்தில் உள்ள தலைமைப் புலவர் நக்கீரர் சிலைக்கு மாலை அணிவித்து இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையில் வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
எந்த ஒரு செயலுக்கும் கீரமங்கலம் மெய்நின்றநாத சுவாமி ஆலயத்தில் உள்ள பிரமாண்ட சிவனை வழிபட்டு தலைமைப் புலவர் நக்கீரரிடம் வைக்கும் அனைத்து கோரிக்கைகளும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடம் உள்ளது. அந்த நம்பிக்கையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்துள்ளோம் என்றனர்.