Skip to main content

அபகரிக்கப்பட்ட நிலம்... நடவடிக்கை எடுக்காத காவல்துறை... தீக்குளித்த முயன்ற குடும்பம்

Published on 17/05/2021 | Edited on 17/05/2021
Family members who tried to set fire to the police station earlier! After the police promised, they dispersed

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள காரனேஷன் தெருவில் வசித்து வருபவர் 45 வயது நிரம்பிய குமாரி. இவரது கணவர் வேல்முருகன், முன்னாள் திமுக பேரூராட்சி உறுப்பினராக இருந்தவர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வேல்முருகன் இறந்துவிட்டார். அவருக்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் 15 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல், போலி ஆவணங்கள் மூலம் விக்கிரவாண்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேறொருவருக்குப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். 

 

இதுகுறித்து அவர்களிடம் குமாரி கேட்டதற்கு, குமாரியின் குடும்பத்தைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர் அந்த நபர்கள். இந்த பிரச்சனை சம்பந்தமாக ஏற்கனவே உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்தாலும், உரிய விசாரணை செய்து மோசடிப் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார் குமாரி. இதனால், நேற்று காலை காவல் நிலையம் வந்து குமாரி மற்றும் அவரது மகன்கள் முரளி, நவீன், கௌதம், மாமியார் விசாலாட்சி உட்பட அவரது குடும்பத்தினர் ஐந்து பேரும் காவலர்களிடம் முறையிட்டுள்ளனர். 

 

அப்போதும் போலீஸார் உரிய விசாரணை செய்து  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்காத காரணத்தால் அவர்கள் 5 பேரும் தங்கள் உடலில் ஏற்கனவே தயாராக வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சி செய்துள்ளனர். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைப் பார்த்த அங்கிருந்த பொது மக்கள், அவர்களைத்  தடுத்து நிறுத்தினர். உடனே அனைவர் மீதும் போலீஸார் தண்ணீரை ஊற்றித் தீக்குளிப்பு முயற்சியைத் தடுத்து நிறுத்தினார்கள். 

 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி விஜயகுமார் மற்றும் பிற காவலர்கள், மோசடிப் பேர் வழிகளிடம் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாகக் குமாரி குடும்பத்தினரிடம் உறுதியளித்தனர். நில அபகரிப்பு செய்த பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து குடும்பத்தினர் அனைவரும் காவல் நிலையத்திற்கு முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் உளுந்தூர்பேட்டை  நகரப் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்