விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகரில் வசிப்பவர் சுரேஷ். இவர், காமாட்சி அம்மன் கோவில் தெருவில் ராகவேந்திரா அச்சகம் என்ற பெயரில் கணினி நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இவரது நிலையத்துக்குச் சென்ற நடுவனந்தல் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், சுரேஷிடம் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளார். அந்த வாக்காளர் அடையாள அட்டையைக் கொண்டு தனது ஆதார் அட்டையில் பெயர் திருத்தம் செய்வதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் இ சேவை மையத்திற்குச் சென்றுள்ளார் செல்வராஜ்.
இ-சேவை மையத்தில் பணி செய்த ஊழியர்கள் சிலர் செல்வராஜ் கொடுத்த வாக்காளர் அடையாள அட்டையை ஆய்வு செய்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து இ-சேவை மைய பணியாளர்கள் செல்வராஜிடம் விசாரணை நடத்தினர். அதில், சுரேஷ் என்பவரது கணினி நிலையத்தில் இருந்து வாக்காளர் அடையாள அட்டை வாங்கி வந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து உடனடியாக திண்டிவனம் வட்டாட்சியர் வசந்த கிருஷ்ணன், சார் ஆட்சியர் அமித் ஆகியோருக்கு பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வராஜிடம் நடத்திய விசாரணையில், சுரேஷிடம் வாக்காளர் அடையாள அட்டை பெற்று வந்ததைக் குறிப்பிட்டுள்ளார். உடனடியாக அதிகாரிகள் இருவரும் சம்பந்தப்பட்ட அந்த கணினி நிலையத்துக்கு விரைந்து சென்றனர். கணினி நிலையத்தில் விசாரணை செய்ததில், சுரேஷ் போலி வாக்காளர் அட்டை தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சுரேஷின் கணினி நிலையத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் அங்கிருந்த பொருட்களைப் பறிமுதல் செய்தனர். கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார், திண்டிவனம் காவல் நிலையத்தில் சுரேஷ் மீது புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சுரேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், விவரத்தை அறிந்த சுரேஷ் உடனடியாக தலைமறைவாகியுள்ளார். தற்போது காவல்துறையினர் சுரேஷை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.