ஈரோடு சாஸ்திரி நகர் முதல் வீதியில் உள்ள ஒரு வீட்டுக்கு இன்று காலை 8 மணிக்கு ஒரு மினி வேன் வந்தது அதிலிருந்த மூட்டைகளை இரண்டு பேர் இறக்கி வீட்டுக்குள் கொண்டு போய் வைத்தனர் சில நிமிடத்தில் வெடிகுண்டு வெடிப்பது போல் "டமால்" என்ற சத்தம் அவ்வளவுதான் தீ பிழம்பாக அந்த பகுதி காட்சி தந்தது.
அதன் அருகே இருந்த பத்துக்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் சின்னாபின்னமானது. குண்டு வெடித்த இடத்தில் மூன்று பேர் உடல் சிதறி இறந்து கிடந்தனர். அருகே இருந்த பலருக்கு காயம். அடுத்த சில நொடிகளில் ஐயோ யாரோ குண்டுவெச்சுட்டாங்க, குண்டு வெடிச்சதுல நெறைய பேர் செத்துட்டாங்க என மக்கள் மத்தியில் அபாயகரமான பீதி கிளம்பியது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார், மோப்ப நாய் என சம்பவ இடத்துக்கு வந்தனர்.
ஈரோடு வளையகார வீதியைச் சேர்ந்தவர் சுகுமாறன் பட்டாசு கடை வைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வாங்கி ஸ்டாக் வைக்க சாஸ்திரி நகரில் உள்ள ஒரு வீட்டை கடந்த மாதம் வாடகைக்கு எடுத்துள்ளார். இங்கு தான் பட்டாசுகளை இருப்பு வைத்திருக்கிறார். இன்று காலை சிவகாசி பட்டாசு கம்பெனியிலிருந்து வந்த அதிக சக்தி வாய்ந்த வெங்காய வெடிகள் 15 மூட்டைகளை கொண்டு வந்துள்ளார். இதில் 13 மூட்டைகள் வேனிலிருந்து இறக்கப்பட்ட பின் மீதி இருந்த இரண்டு மூட்டைகளும் திடீரென வெடிக்க அங்கிருந்த 15 மூட்டை வெங்காய வெடிகளும் ஒரு சேர வெடித்துள்ளது.
இதில் அங்கு இருந்த சுகுமாறன் மகன் கார்த்திக் ராஜா, மேலும் இருவர் வெடி விபத்தில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளனர். இதில் அக்கம் பக்கத்திலிருந்த பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீபாவளி நெருங்க நெருங்க வெடி விபத்துக்கள் கூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வெடி சம்பவம் அப்பகுதியிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நில அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்களிடம் குண்டு வெடித்து விட்டது என்ற அச்சமான பீதியும் பரபரப்பும் ஈரோட்டில் ஏற்பட்டது.