விருதுநகரில் அடிக்கடி பட்டாசு ஆலை வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது தொடர்கதையாகி வரும் நிலையில் இன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, காளையார்குறிச்சி பகுதியில் 'சுப்ரீம் ஃபயர் ஹவுஸ்' எனும் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. முருகவேல் என்பவருக்கு சொந்தமான இந்தப் பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம்போல பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பட்டாசு தயாரிப்பதற்கான மருந்து கலவை தயார் செய்யும் பணியின் போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்த நிலையில், ஒரு பெண் உட்பட இரண்டு பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி துணை ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். உடனடியாக மற்ற தொழிலாளர்கள் ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதனால் இங்கு பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
'பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன பொருட்களை எடுத்துச் செல்லும் பொழுது கீழே விழுந்ததில் ஏற்பட்ட உராய்வில் வெடித்துச் சிதறியதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் போலீசாரின் முழு விசாரணைக்கு பின்னரே காரணம் தெரிய வரும். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் தொடர் ஆய்வு செய்து பல்வேறு விதி மீறல்கள் அடிப்படையில் 80க்கும் மேற்பட்ட ஆலைகளுடைய உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது' என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.