தமிழகத்தில் கூட்டுறவுத்துறை பதிவாளர், இதர 15 செயல் பதிவாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் 23,149 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.
சேலம் மண்டலத்தில் இணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில் 360 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களுக்கு தேர்வான நிர்வாகக்குழுவின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து, தற்போது 325 கூட்டுறவு சங்கங்களுக்கு புதிதாக செயல் ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
முதல்கட்டமாக 78 சங்கங்களின் பதவிக்காலம் கடந்த ஏப். 2ம் தேதி முடிவடைந்தது. இந்த சங்கங்களுக்கு ஏற்கனவே செயல் ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். அடுத்தடுத்த கட்டங்களில், ஆக. 5, 6 தேதிகளில் 247 கூட்டுறவு சங்கங்களில் நிர்வாகக்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து இந்த சங்கங்களுக்கும் புதிதாக செயல் ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதேநேரம், கடந்த 5 ஆண்டுக்கு முன்பு, பல்வேறு காரணங்களால் சேலம் மண்டலத்தில் 18 கூட்டுறவு சங்கங்களில் தேர்தல் தாமதமாக நடந்தது. இந்த சங்கங்களில் மட்டும் இன்னும் நிர்வாகக்குழு தொடர்கிறது. சேலம் சரகத்தில் உடையாப்பட்டி, ஏ.என்.புதூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளிட்ட 9 சங்கங்களும், ஆத்தூர் சரகத்தில் 6, ஓமலூர் சரகத்தில் 3 சங்கங்களிலும் நிர்வாகக்குழு தொடர்ந்து இயங்கி வருகிறது.
இவை ஒருபுறம் இருக்க, முறைகேடு உள்ளிட்ட புகார்களின் பேரில் முன்கூட்டியே 17 சங்கங்களில் நிர்வாகக்குழு கலைக்கப்பட்டு உள்ளது. அதையடுத்து அந்த கூட்டுறவு சங்கங்களுக்கும் செயல் ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகக்குழு தேர்தல் நடத்தி முடிக்கப்படும் வரை, செயலாட்சியர்களே அனைத்து நிர்வாகப் பணிகளையும் மேற்கொள்வார்கள்.