கடந்த மாதம், ‘தரமற்ற 89 இன்ஜினியரிங் கல்லூரிகளை கவுன்சிலிங்கில் தவிர்த்திடுக’ என்று அண்ணாமலை பல்கலைக்கழகம் வேண்டுகோள் விடுத்ததாக, வாட்ஸ்-ஆப் உள்ளிட்ட வலைத்தளங்களில் தகவல் ஒன்று வேகமாகப் பரவியது. அதனைத்தொடர்ந்து, அந்தப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடவில்லை என்றும் தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இணைவுக் கல்லூரிகளில் தரமற்ற கல்லூரிகள் / தரமான கல்லூரிகள் என்று பாகுபாடு செய்யவில்லை என்றும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கையொப்பத்துடன், ஜூலை 1-ஆம் தேதி அறிக்கை வெளியானது.
அப்போது யாரோ வெளியிட்ட தரமற்ற கல்லூரிகளின் பட்டியலில் விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவிலில் உள்ள வி.பி.எம்.எம். காலேஜ் ஆப் ஆர்க்கிடெக்சர் பார் உமன் மற்றும் வி.பி.முத்தையா பிள்ளை மீனாட்சி அம்மாள் இன்ஜினியரிங் காலேஜ் பார் உமன் ஆகிய இரு கல்லூரிகளும் இடம் பெற்றிருந்தன.
இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் கான்சாபுரத்தைச் சேர்ந்த கண்ணகி என்பவர், தான் படித்துவரும் வி.பி.எம்.எம். காலேஜ் ஆப் ஆர்க்கிடெக்சர் பார் உமன், உள்கட்டமைப்பு வசதியில்லாமல் இயங்கி வருவதாக அண்ணா பல்கலைக்கழகத்தில் புகார் தெரிவித்தார். அதனால், மற்றொரு கல்லூரிக்கு மாற்றப்பட்டு அவர் படிப்பைத் தொடர்ந்தார்.
வி.பி.எம்.எம். கல்லூரியோ, கண்ணகியின் அசல் கல்விச் சான்றிதழ்களை தர மறுத்தது. இடையில் வெளியேறியதால் குறிப்பிட்ட காலத்துக்குரிய கல்விக் கட்டணத்தை செலுத்தியே ஆக வேண்டும் என்று நிர்ப்பந்தித்தது. தமிழகத்தில் பல கல்லூரிகளிலும் மாணவர்கள் சந்தித்துவரும் இந்த விவகாரம் குறித்து, விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் புகார் மனு அளித்தார் கண்ணகி. விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான அ.முத்துசாரதா மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, அந்தக் கல்லூரி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அசல் கல்விச் சான்றிதழ்கள் திரும்பப் பெறப்பட்டு, கண்ணகியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
பிரச்சனை எழும்போது, தனியார் கல்லூரிகளிடமிருந்து தங்களின் அசல் கல்விச்சான்றிதழ்களை மாணவர்கள் பலரும் பெற முடியாமல் தவிப்பது சகஜமாகிவிட்ட நிலையில், கண்ணகி எடுத்த முயற்சி பாராட்டுக்குரியதே!