கடந்த வருடம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. மேலும் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய அறிவுறுத்தல் ஒன்றையும் கொடுத்திருந்தது. அதன்படி அதிமுக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்து தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பினை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சஞ்சய் குமார் அமர்வு வாசித்தது. இந்த தீர்ப்பில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இது உண்மையிலேயே தர்மத்திற்கு கிடைத்திருக்கிற தீர்ப்பாக அமைந்திருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆத்மா அதிமுகவை காத்து வருகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. எடப்பாடி தலைமையில் இனி நிரந்தர பொதுச் செயலாளர் என்ற வரலாற்றை படைக்கிற தீர்ப்பாக இந்த தீர்ப்பு இருக்கிறது. இந்த தீர்ப்பை பொறுத்தவரை நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை அதிமுக அடைய கொடுக்கப்பட்ட தீர்ப்பு. மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும் தீர்ப்பாக இது இருக்கிறது'' என்றார்.