
முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.சி.வீரமணியின் வீடுகள், அலுவலகங்கள், உறவினர்கள் வீடுகள், பினாமிகளின் வீடுகள் என சுமார் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில் அவரது மாமனார் வீட்டிலும் சோதனை நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், போளுர் அடுத்த குருவிமலை என்கிற கிராமத்தில் உள்ள பணக்காரர் பழனி. பண்ணையார் பழனி என்பார்கள் இந்த வட்டாரத்தில். இவரது மகளைத் தான் கே.சி.வீரமணி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
2012- ஆம் ஆண்டு அமைச்சரானபோது ஊழல் பணத்தைத் தனது மாமனாரிடம் தந்து நிலங்களாக வாங்கிப் போட்டார். தனது மாமனாரான பழனி மீது கே.சி.வீரமணிக்கு மரியாதை இருந்தாலும் குடும்பப் பிரச்சனையால் மாமனாரை பின்பு நம்புவதில்லை. இதனால் மாமனார் பெயரில் வாங்கிய சுமார் 200 ஏக்கர் நிலங்களை தன் பெயருக்கு மாற்றத் துவங்கினார் கே.சி.வீரமணி. அதில் சில சொத்துக்கள் வாங்கிய சில மாதங்களிலேயே கைமாறியுள்ளது.
மாமனாரிடமிருந்து நிலங்களை தன் பெயருக்கு மாற்றினால் செட்டில்மென்ட் கணக்கில் பத்திரப் பதிவு செய்தால் வருமானம் எங்கிருந்து வந்தது என்கிற கேள்வி வரும் என்பதால், மாமனார் மருமகனுக்கு தானம் தருவதுபோல் பத்திரப்பதிவு செய்துள்ளார். அவரது சின்ன மாமானர் தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க.வுக்கு சென்ற போளூர் கார்த்திகேயன் பெயரிலும் சொத்துக்களை வாங்கினார். இந்த கார்த்திகேயன் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மாப்பிள்ளையின் சிபாரிசில் போளூர் சட்டமன்றத் தொகுதிக்கு எம்.எல்.ஏ. சீட் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தனது தாயார், சகோதரிகள் பெயரிலும் சொத்துக்களை வாங்கி பின்பு, அதனை அவர்கள் மகனுக்கு, சகோதரனுக்கு தானம் தருவது போல் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.