நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.
அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் வந்திருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் 'ரோட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிக தொண்டர்கள் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் கோவை 100 அடி சாலையில் பெரும் வரவேற்பு இல்லாத அளவிற்கு சுமார் 200 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். நிர்மலா சீதாராமன் வாகனத்தில் செல்லும் வழியில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையே இருந்தது. பாஜக தலைவர்களின் ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காதது பாஜக கட்சியினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.