சரியாக 50 ஆண்டுகளுக்கு முன், 05.11.1970 அன்று ஈரோடு கருங்கல்பாளையத்தில், 'சொல்லின் செல்வரும்' தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தந்தையுமான ஈ.வி.கே சம்பத் தலைமையில், அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர், காந்தி சிலையைத் திறந்து வைத்தார். இன்றுடன் 50 ஆம் ஆண்டு பொன்விழா என்பதால் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நேரில் சென்று, காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பிறகு அவர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசும்போது, "அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் போட்டியிடுவதற்குக் கூட காரணம் காந்தியடிகள்தான். காந்தியடிகளின் தாக்கம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் பெயரை மறைக்க வேண்டும் என்ற முயற்சியில் இந்தியப் பிரதமர் மோடி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
காந்தியைப்போல், நேருவைப் போல், இந்திரா காந்தியைப் போல் பாரதிய ஜனதா கட்சியில் மக்கள் தலைவர்கள் யாரும் இல்லாத காரணத்தினால், காங்கிரசை சேர்ந்த வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்களை, அவர்கள் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். காந்தியையும் நேருவையும் கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வளவு பெரிய சிலையை குஜராத்தில் நிறுவியிருக்கிறார்கள். காங்கிரஸை எதிர்க்க அவர்களிடம் தலைவர்கள் இல்லை. காங்கிரஸ் தலைவர்களை வைத்தே காழ்ப்புணர்ச்சியுடன் தியாகத்தை முறியடிக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் இன்றைக்கு நல்ல காரியங்களைச் செய்வதை விட்டுவிட்டு, அவர்களை ஒடுக்குவதற்கும் சிறு வியாபாரிகளை ஒடுக்குவதற்கும் செய்ய வேண்டிய அனைத்தையும் மோடி செய்து கொண்டிருக்கிறார். பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்கிறது. விவசாயிகளின் வாழ்வு, வளம் ஆகிக்கொண்டிருக்கிறது என்று மோடி சொல்கிறார். ஆனால் உண்மையில் அவர் விவசாயிகளை நசுக்கிக் கொண்டிருக்கிறார்.
விவசாயி தன்னுடைய நிலத்தில் கிடைக்கும் பொருளை விற்க முடியாத அவல நிலையை உருவாக்கி இருக்கிறார். குறிப்பிட்ட சில பணக்காரர்களுக்கு மட்டும் லாபம் அடைவதற்காக மோடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதனை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ், போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நாட்டில் மிகப்பெரிய ஆபத்தாக மோடி இருக்கிறார்.
காஷ்மீரில் ஜனநாயகம் கிடையாது. அங்கு இருக்கும் தலைவர்கள் எல்லோரும் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். பேச்சுரிமை இல்லை, யாரும் அதிகமாகப் பேசக்கூடாது. பத்திரிகைகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார்கள். இதனை நீக்க நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம். கரோனோவால் ஒருபுறமும், மறுபுறம் பொருளாதார பாதிப்பாலும் மக்கள் வாடிக்கொண்டிருக்கிறார்கள். நல்ல திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் நாட்டைக் காவி மயமாக்க வேண்டும் என முயற்சிக்கிறார்.
இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம், ஜெயின், பார்சி அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், இதனைக் காவி மயமாக்க வேண்டும் சிறுபான்மை மக்களை நாட்டை விட்டுத் துரத்த வேண்டும் என்ற கொடூரமான மனப்பான்மையுடன் மோடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்தைப் பொருத்தவரை பாரதிய ஜனதா கட்சியை என்றும் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இங்கு எத்தனை முருகன் வந்தாலும் எத்தனை மோடி வந்தாலும் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி துரத்தப்பட்டுக் கொண்டே இருக்கும்." என்றார்.