
ஈரோடு வீரப்பன்சத்திரம் அம்பேத்கர் மகன் சந்தோஷ்(வயது 29). இவர் நேற்று ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியில் காந்தி நகர் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டு அருகில் உள்ள பாரில் மது குடித்துள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஜின்னா (வயது 30) மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் கும்பல் ஒன்றாக மது குடித்து கொண்டிருந்தனர்.
சந்தோஷ் மது குடித்து விட்டு டாஸ்மாக் பாரினை விட்டு வெளியே வந்தபோது, ஜின்னா மற்றும் அவருடன் வந்த 4 பேர் சந்தோஷை வழிமறித்து ஏற்கனவே அவர்களுக்குள் இருந்த முன்விரோதம் காரணமாக தகராறில் ஈடுபட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஆத்திரம் அடைந்த ஜின்னா அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷின் வயிற்றில் குத்தினார். இதையடுத்து சந்தோஷ் நிலைகுலைந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சந்தோஷ் இறந்ததை உறுதி செய்த பின், ஜின்னா மற்றும் அவருடன் வந்த 4 வாலிபர்கள் 3 டூவீலரில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், டவுன் டி.எஸ்.பி, ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்தோஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் பார் மற்றும் சுற்றுப்புறத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க விரைந்துள்ளனர்.
கொலையான சந்தோஷ், கடந்த 3 ஆண்டுகளுக்கு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். சந்தோஷ் மீது வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி போலீஸ் நிலையங்களில் 2 வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. அதேபோல் சந்தோஷை கத்தியால் குத்திய ஜின்னா மீதும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் குற்றவாளிகளை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.