தொடர்ந்து அதிரடியாக பல்வேறு கம்பெனிகளுக்கும் இறங்கி வருகிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள். தொழில் நகரமான ஈரோட்டை குறிவைத்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கைந்து கம்பெனிகளில் அதிரடி சோதனை நடத்தியுள்ளது வருமானவரித்துறை.
இதன் தொடர்ச்சியாக ஈரோட்டில் இயங்கிவரும் பிரபலமான பைப் கம்பெனியான பாரி டிரேடர்ஸ் என்ற கம்பெனிக்கு இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் 15க்கும் மேற்பட்டோர் அதிரடியாக நுழைந்தனர். இந்த கம்பெனியின் விற்பனை நிலையம், குடோன், அலுவலகம் என மூன்று இடங்களில் நுழைந்த அதிகாரிகள் வெளி நபர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் உள்ளே உள்ளவர்களை வெளியே செல்லவிடாமல் கதவை பூட்டிக்கொண்டு ரெய்டு செய்து வருகிறார்கள்.
இந்த பைப் நிறுவனத்தில் நடத்தப்படும் ஐ.டி.ரெய்டு ஈரோட்டில் தொழில் புரிவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுபற்றி தொழிலதிபர் ஒருவர் நம்மிடம் கூறும்போது, "ஜவுளி முதல்கொண்டு பல்வேறு தொழில்கள் நடத்தும் ஒரு தொழில் நகரம் ஈரோடு. இங்கு ஐடி ரெய்டு தொடர்ந்து இந்த வருடத்தில் பல முறை பல கம்பெனிகளில் நடத்தப்பட்டுள்ளது. ஒரு நடுத்தரமான கம்பெனிகளையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. வருவாய் ஆண்டு மார்ச் 31 என்பதால் ரெய்டை விரைவுபடுத்தியுள்ளனர் முறையாக கணக்கு வழக்குகள் தாக்கல் செய்யப்படும் இந்த ஆண்டு அதிக ரெய்டு செய்து வருகிறது வருமானவரித்துறை சிறு குறு நிறுவனங்களை ஒடுக்குவதற்காக இப்படி செய்கிறார்கள் என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது'' என்றார்.