ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடைபெறும். அந்த வகையில், 2023 ஆம் ஆண்டிற்கான 19 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்ளும் சிறந்த படைப்பாளருக்கு ஜி.டி.நாயுடு விருது அளிக்கப்பட இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்த விருதை பெறுவோருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என மக்கள் சிந்தனை பேரவை அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சில தினங்களுக்கு முன் மக்கள் சிந்தனை பேரவை அமைப்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில், படைப்பாளர் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் எனவும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வு முயற்சிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்றும் சில நிபந்தனைகளை வெளியிட்டிருந்தது. மேலும், அதில் ஐந்து தகுதிமிக்க அறிவியல் அறிஞர்களின் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு அவர்களால் தேர்வு செய்யப்படும் ஒருவருக்கே இந்த விருது வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவித்திருந்தது.
மேலும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆய்வுக் கூடங்களிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு ஆய்வுக் கூடங்களிலோ ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். பெயர் பெற்ற சர்வதேச அறிவியல் இதழ்களில் வெளியான தங்களது 10 கட்டுரைகளின் தலைப்புகளையும் வெளியான இதழ்கள் மற்றும் தேதிகள் குறித்த விவரங்களையும் அனுப்பி வைக்க வேண்டும். எந்த கண்டுபிடிப்புக்கு ஆய்வாளர் விருதுக்குரியவராக விளங்குகிறார் என்பதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. ஆய்வு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரும் ஜூலை 30 ஆம் தேதிக்குள் info@makkalsinthanaiperavai.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு மாவட்ட படைப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. அதில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை 19 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா நடைபெற இருக்கிறது. அந்த புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ளும் படைப்பாளிகள் தங்களது படைப்புகளை வரும் ஜூலை 20 ஆம் தேதி முதல் மக்கள் சிந்தனை பேரவை தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் படைப்புகளின் பெயர் மற்றும் பிரதிகளின் எண்ணிக்கை, படைப்பாளரின் தபால் முகவரி, தொடர்பு எண், வாட்ஸ் அப் எண், மின்னஞ்சல் உள்ளிட்ட முழு விபரங்கள் அடங்கிய ஒரு கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.