கலெக்டா் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களில் சிலர் அடிக்கடி தீ குளிக்க முயற்சி செய்வதால் அதைத் தடுக்கும் விதமாக நாகர்கோவில் கலெக்டா் அலுவலக வாசலில் போலீஸார் நின்று பொதுமக்களைச் சோதனை செய்து கலெக்டா் அலுவலகத்துக்குள் அனுமதித்து வந்தனர். இந்த நிலையில் 17-ம் தேதி போலீஸாரின் சோதனையை மீறி கலெக்டா் அலுவலகத்துக்குள் நுழைந்த இறச்சகுளம் பகுதியை சேர்ந்த வயதான தம்பதிகளான மருதப்பனும், சரஸ்வதியும் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடம்பில் ஊற்றி தீ குளிக்க முயன்றுள்ளனர். இதனைப் பார்த்த போலீஸார் விரைந்து சென்று அவர்களிடமிருந்து மண்ணெண்ணெய்யை பறித்தனர்.
பின்னர் அந்த தம்பதியினரை போலீஸார் விசாரிக்கையில் அந்த தம்பதியினர் கூறியதாவது, “எங்களுக்கு 5 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உண்டு. இதில் 2-ஆவது ஆண் பிள்ளை முருகனை அவரின் மனைவியும் பிள்ளைகளும் அடித்துத் துன்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து நாங்கள் வசிக்கும் வீட்டை முருகனின் பிள்ளைகள் தங்களின் பெயருக்கு எழுதித் தரக் கேட்டு வற்புறுத்தி வந்தனர். ஒரு முறை வயதான எங்கள் இருவரையும் தாக்கவும் செய்தனர். இது சம்பந்தமாக பூதப்பாண்டி போலீஸில் புகார் கொடுத்தும் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் அவர்கள் எங்கள் இருவரையும் கொலை செய்து விட்டு வீட்டை எடுப்பதாகவும் கூறி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் எங்களுக்கு பாதுகாப்பும் நியாயமும் கேட்டுத் தான் கலெக்டா் அலுவலகத்தில் தீ குளிக்கும் முடிவுக்கு வந்தோம்” என்றனர். இந்த விவகாரம் கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீஸார் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.