பள்ளிக்கல்வித்துறையின் புதிய அரசாணையால் அங்கீகாரம், கண்காணிப்பு என்ற பெயரில் தனியார் பள்ளிகளை அதிகாரிகள் சுரண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தனியார் பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் பகீர் புகார் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை கடந்த 18.5.2018ம் தேதி புதிதாக ஓர் ஆரசாணையை வெளியிட்டது. அதன்படி, இதுவரை நடைமுறையில் இருந்து வந்த மெட்ரிக் இயக்குநரகம் கலைக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் பள்ளிகளைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டு இருந்த மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் (ஐஎம்எஸ்), மாவட்டக் கல்வி அலுவலர்கள் (டிஇஓ) ஆகியோர் வட்டார கல்வி அலுவலர்களாக மாற்றப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த அரசாணை அமலுக்கு வருவதால், தனியார் பள்ளிகளுக்குக் கடும் நெருக்கடிகள் ஏற்படும் என்றும், அதிகாரிகள் ஊழல் செய்யவே வழிவகுக்கும் என்றும் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மாவட்டந்தோறும் தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை நடத்தி வருகிறார். இந்த அரசாணை குறித்து அவர் விரிவாக நம்மிடம் பேசினார்.
''அரசாணை எண் 101 அமலுக்கு வருவதால், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குகிறோம், ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்துவதற்குதான் வழிவகுக்கும். கல்வி அலுவலர்கள், அரசியல்வாதிகளுக்கும், உயரதிகாரிகளுக்கும் பணம் வசூலித்துக் கொடுக்கும் ஏஜன்டுகளாகத்தான் செயல்படுவர்.
இதுநாள்வரை நடைமுறையில் இருந்து வரும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அதேபோல் மாவட்ட அளவில் உள்ள ஐஎம்எஸ் பணியிடத்தையும் கலைக்கக்கூடாது. தனியார் பள்ளிகள் ஒவ்வொன்றும் அங்கீகாரம், ஆய்வு, விண்ணப்பக்கட்டணம் என 5500 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை மொத்தம் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை பள்ளிக்கல்வித்துறைக்கு செலுத்தி இருக்கிறோம். மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்தைக் கலைத்துவிட்டால், அந்தப் பணத்தை அரசாங்கம் எங்களுக்குத் திருப்பித் தந்து விடுமா?
தனியார் பள்ளிகள் தரப்பில் ஏதேனும் முறையீடு என்றால் ஐஎம்எஸ் அல்லது இயக்குநரை அணுகி தீர்வு பெறுவது எளிமையாக இருந்தது. இனிமேல் வட்டார அளவில் நியமிக்கப்படும் ஒவ்வொரு அதிகாரியும், எங்களை அதிகாரம் செய்யும் அபாயம் இருக்கிறது. புதிய அரசாணை என்பது தனியார் பள்ளிகளை நசுக்கவே கொண்டு வரப்பட்டுள்ளது.
இப்படி ஒரு அரசாணை வெளியிடுவது குறித்து எந்தவித பூர்வாங்க ஆய்வுகளோ, தனியார் பள்ளிகளுடனான கலந்தாய்வோ நடத்தாதது ஏன்?
கடந்த ஐந்து ஆண்டுகளாக 2556 தனியார் உயர்நிலைப்பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறது. காலக்கெடு முடிந்தும் அங்கீகாரம் பெறாத ஒவ்வொரு பள்ளிக்கும் தினமும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற நீதிமன்ற உத்தரவை அரசாங்கமே மீறுகிறது. அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்தும் அதை கண்டுகொள்ளாத அரசுக்குதான் அபராதம் விதிக்க வேண்டும்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை எல்லா வகையிலும் சீர்கெட்டுக் கிடக்கிறது. பொதுத்தேர்வு ஆங்கில விடைத்தாள்களைக் கூட தமிழ் ஆசிரியர்களைக் கொண்டுதான் இந்த முறை மதிப்பீடு செய்யப்பட்டது. புதிய பாடப்புத்தகத்தின் அடிப்படையில் பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படவில்லை.
புதிய அரசாணையில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். அங்கீகாரம் கோரி விண்ணப்பித்துள்ள பழைய பள்ளிகளிடம் எல்பிஏ, டிடிசிபி, சிஎம்டிஏ சான்றுகள் கேட்கக்கூடாது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமை ச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும். தனியார் பள்ளிகளுக்கு முதல்கட்டமாக உத்தேச கட்டணத்தையாவது நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்,'' என்றார் கே.ஆர்.நந்தகுமார்.