Skip to main content

தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை - ஒரு நபர் ஆணையம் அமைக்க முதல்வர் உத்தரவு!

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

 

education one commission forming tamilnadu chief minister mkstalin order

 

தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆராய ஒரு நபர் ஆணையம் அமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "2020- 2021 ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதேபோன்று, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளில் கடந்த ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை விவரங்களின் படி, அரசுக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னிலை வகிக்கும் சுயநிதிக் கல்லூரிகளில், மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டு, இந்நிலை மாற்றப்பட வேண்டுமென்று பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளனர்.

 

இக்கோரிக்கையினைத் தீர ஆராய்ந்தும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சமூகப் பொருளாதார நிலைகள் குறித்தும், அதனால் அவர்கள் சந்திக்கக்கூடிய இடர்பாடுகள் ஏதுமிருப்பின், அவற்றைக் கண்டறியவும், கடந்த ஆண்டுகளில் அம்மாணவர்களின் சேர்க்கை பல்வேறு தொழிற்கல்வி நிறுவனங்களில் எவ்வாறு உள்ளது என ஆய்வு செய்தும், மேலே கூறிய அக்காரணிகளால், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சேர்க்கை தொழிற்கல்விகளான பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற படிப்புகளில் குறைந்த அளவில் உள்ள நிலையே இருப்பின், இந்நிலையை சரி செய்திட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்ய, டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (15/06/2021) உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணையம், தனது அறிக்கையினை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும்". இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்