தமிழகத்தைப் பொருத்தவரை இருமொழிக் கொள்கைதான் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மூன்று நாள் சுற்றுப்பயணமாக ஞாயிற்றுக்கிழமை காலையில் விமானம் மூலம் சேலம் வந்தார். காமலாபுரம் விமான நிலையத்தில் அவருக்கு, அதிமுக மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் எம்எல்ஏ தலைமையில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தெரிவித்து இருந்தார். அப்போது சட்டசபையில் பால் கொள்முதல் விலையை உயர்த்துவோம் என தெரிவித்து இருந்தேன். பால் உற்பத்தியாளர்களும் கொள்முதல் விலையை உயர்த்துமாறு கோரிக்கை விடுத்து இருந்தனர். அதன்படி, தற்போது பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக பால் விலை உயர்த்தப்படவில்லை. கொள்முதல் விலை, விற்பனை விலை ஆகிய இரண்டும் கணக்கிட்டுதான் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. பெரும்பாலான பால் கூட்டுறவு சங்கங்கள் நட்டத்தில் இயங்குகின்றன. சில சங்கங்கள்தான் லாபத்தில் இயங்குகின்றன. டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் பால் கொள்முதல் விலை அதிகம்.
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தி வருகிறோம். கால்நடை தீவனங்கள் ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வாய்ப்பு இல்லை. டெல்டா பகுதியில் பெய்து வரும் மழையைக் கணக்கிட்டுதான் முதல்கட்டமாக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. ஓசையில் தற்போதுதான் நாற்று நட்டு இருக்கிறார்கள். இன்னும் ஐந்து அல்லது ஆறு நாள்களில் ஓசைகளுக்கு தேவையான தண்ணீர் திறக்கப்படும்.
புதிய கல்விக்கொள்கையில் வெளிப்படையாக உள்ளோம். குறிப்பாக, இருமொழிக் கொள்கை என்பதில் திடமாக இருக்கிறோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.