அதிமுக ஓர் இரட்டை மாட்டு வண்டி என்று செம்மலை எம்எல்ஏ கூறினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்துத்துறை அதிகாரிகளுடன் சேலத்தில் இன்று ஆய்வு நடத்தினார். இதில் கலந்து கொள்ள ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் வந்திருந்தனர். அப்போது அதிமுகவின் அமைப்புச்செயலாளரும் எம்எல்ஏவுமான செம்மலை, செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9, 2019) கூறியதாவது:
சேலம் மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில்தான் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தேவையில்லாத இடங்களில் பாலங்கள் கட்டப்படவில்லை.
இரட்டை தலைமை குறித்து ராஜன் செல்லப்பா பேசியது, வெறும் வாய்க்கு அவல் கிடைத்ததுபோல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுகவில் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் கருத்து கூறும் சுதந்திரம் உண்டு. அவரும் அந்த அடிப்படையில்தான் கருத்து கூறியிருக்கிறார்.
கட்சிக்கு ஒற்றைத் தலைமையா? இரட்டைத் தலைமையா? என்பதை கட்சியின் தலைமை பரிசீலித்து ஒரு நல்ல முடிவை எடுக்கும். இந்த ஆட்சியை பொருத்தளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று மிகச்சிறப்பாக நடத்திக்கொண்டு இருக்கிறார். கட்சியைப் பொருத்தவரை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்து பேசித்தான் எந்த முடிவையும் எடுக்கிறார்.
கட்சிக்குள் எந்த கோஷ்டி பூசலும் இல்லை. ஒரு தலைமையா? இரு தலைமையா? என்பதை கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் முடிவு எடுப்பார்கள். அவர்களின் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவோம்.
ஒற்றை மாட்டு வண்டி இருக்கிறது. அதேபோல் இரு மாடுகள் பூட்டிய வண்டியும் இருக்கிறது. சாலையில் பயணிக்கும்போது இரு வண்டிகளுமே சிறப்பாகவே செயல்படுகிறது. அதனால் ஒரு மாடு பூட்டிய வண்டி வேண்டுமா? இரு மாடுகள் பூட்டிய வண்டி வேண்டுமா? அதில் எது சிறந்தது என்ற விவாதமே தேவையற்றது.
வண்டி ஒழுங்காக செல்லும்போது எந்த பிரச்னையும் கிடையாது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு ஒரு சரிவு ஏற்பட்டுள்ளது. அதில் நிலைகுலைந்து உள்ளோம். அதை சரிசெய்து, சுதாரித்து எழுந்து வர நிதானம் தேவை. மாறாக திசை திருப்பக்கூடாது. இவ்வாறு செம்மலை எம்எல்ஏ கூறினார்.