புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் எம்.உசிலம்பட்டி ஊராட்சியில் 132 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்க தலா ரூ 2 ஆயிரம் பணத்தை ஊராட்சி செயலர் சின்னக்காளை மற்றும் பணத்தளப் பொறுப்பாளர் முருகேசனும் லஞ்சமாக வாங்குவதை அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் வீடியோ மற்றும் படங்கள் எடுத்தனர். அதைச் சம்மந்தப்பட்டவர்கள் பார்த்தும்கூட லஞ்சம் வாங்குவதை அவர்கள் நிறுத்தவில்லை.
இதுகுறித்து நாம் ஊராட்சி மன்றத் தலைவர் பழனிச்சாமி மற்றும் ஊராட்சி செயலர் சின்னக்காளை ஆகியோரிடம் கேட்டபோது, ''கால்நடைத்துறை மூலம் வழங்கப்படும் விலையில்லா ஆடுகளுக்கு தமிழக அரசு வழங்கும் ரூ.10 ஆயிரம் போதவில்லை என்று ஆடு வியாபாரி சொல்கிறார். அதனால் பயனாளிகள் தலா ரூ.2,000 பணம் கொடுத்து ஆடுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கால்நடைத்துறை ஏ.டி மற்றும் ஒலியமங்கலம் கால்நடை மருத்துவர் ஆகியோர் பயனாளிகளை அழைத்துப் பேச, பயனாளிகள் சம்மதித்தனர்.
இந்நிலையில்தான் விலையில்லா ஆடுகள் கொன்னையூர் சந்தையில் வைத்து கொடுக்கும் போது பயனாளிகள் ஒத்துக்கொண்டபடி ரூ.2 ஆயிரம் கொடுத்தனர். பிறகு ஆடுகள் சின்னதாக இருப்பதாகச் சொன்னதால் பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு பயனாளிகளே நேரில் பணம் கொடுத்து ஆடுகளை வாங்கிச் சென்றனர்'' என்றனர்.
இந்தச் செய்தியை நக்கீரன் இணையத்தில் முதலில் வெளியிட்டிருந்தோம். இந்தச் செய்தியைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். மேலும், இது சம்மந்தமான வீடியோ பதிவுகளையும் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். நக்கீரன் இணையத்தில் வீடியோவும் வெளியிட்டிருந்த நிலையில், இன்று வியாழக்கிழமை மாலை ஊராட்சி செயலர் சின்னக்காளை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், பணித்தளப் பொறுப்பாளர் பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளார். மேலும், இதுதொடர்பாக கால்நடைத்துறை உயர் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் பயனாளிகளிடம் நேரடியாகப் பணம் கேட்ட கால்நடைத்துறையினர் மீதும் துறைரீதியிலான நடவடிக்கைகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.