திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தண்டபாணி மகன் விஷ்ணு (28). இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் கோயில் எம்ஜிஆர் கல்லூரி பகுதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வாகனத்திலிருந்து ஏதோ புகை வந்ததை அறிந்த விஷ்ணு பதறிப் போய் வாகனத்தை நிறுத்திவிட்டு பார்க்கையில் பெட்ரோல் டேங்க்கில் இருந்து கசிந்த பெட்ரோல் வாகனத்தின் மீது பட்டு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விஷ்ணு உடனடியாக நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திவிட்டு அருகாமையில் கேனில் இருந்த தண்ணீரை ஊற்றி உள்ளார். இருப்பினும் தீ கட்டுக்கடங்காமல் இருசக்கர வாகனம் முழுவதும் மளமளவென தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது. வாகனம் தீப்பற்றி எரிந்ததைக் கண்டு வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்திவிட்டு சிதறி ஓடி உள்ளனர்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் இருசக்கர வாகனம் முழுவதும் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான வெப்பம் கோடை காலங்களில் நிலவுகிறது. இந்த ஆண்டு வெப்ப காற்றும், வெப்ப சலனமும் தொடர்ச்சியாக கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக வீசிக் கொண்டிருக்கிறது. வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம் போன்ற தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் 107 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் வானிலை மையத்தினரும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வயதானவர்கள், உடல்நலம் சரியில்லாதவர், குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் வைத்திருக்கின்றனர்.
இந்த அதீத வெப்பத்தால் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் டேங்க் வெடிப்பது, தீப்பற்றி எரிவது போன்றவை நடக்கத் தொடங்கியுள்ளன . இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கோடை காலங்களில் வாகனங்களில் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்ப வேண்டாம், டீசல் நிரப்ப வேண்டாம் தினமும் ஒரு முறையாவது பெட்ரோல் டேங்க் மூடியை திறந்து அதில் உள்ள காற்றை சிறிது நேரம் வெளியேற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.