Skip to main content

வீட்டின் கழிவறை மீது அறுந்து விழுந்த மின்கம்பி; முதியவர் உயிரிழப்பு

Published on 13/10/2024 | Edited on 13/10/2024
nn

திருப்பத்தூரில் முதியவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர்தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பூக்கடை வியாபாரி குமரேசன்(70). இவர் வீட்டின் பின்புறமாக அப்பகுதியில் உள்ள வீடுகளின் மேல் அருகிலுள்ள மதன்குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு செல்லும் உயர் மின்னழுத்த கம்பி நேற்று நள்ளிரவில் பெய்த மழையின் காரணமாக அறுந்து விழுந்துள்ளது. மின்கம்பி குமரேசன் வீட்டின் கழிவறை மீது அறுந்து விழுந்ததை கவனிக்காமல் காலை கழிவறை சென்ற குமரேசன் கவனக்குறைவாக மின்கம்பியை கையில் பிடித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் கிராமிய போலீசாரிடம் இது தொடர்பாக அப்பகுதி மக்கள் குடியிருப்பு பகுதியில் மூன்று ஆண்டுகளாக ஆபத்தான முறையில் செல்லும் உயர் மின்னழுத்த கம்பியை மாற்றியமைக்க கோரி மின்துறை அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு வைத்தனர். அப்பகுதி மக்கள் முதியவர் உயிரிழப்புக்கு மின் துறை அலுவலர்களே காரணம் மின்சார துறை உயர் அதிகாரிகள் வந்து இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தினால் மட்டுமே இறந்தவரின் உடலை ஒப்படைப்போம் எனக் கூறி உறவினர்கள் மற்றும் அப்பகுதி  மக்கள் சடலத்தை எடுக்க விடாமல் தடுத்தனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு இதற்கான நடவடிக்கை எடுப்பதாக மின்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததன் பெயரில் பிரேதத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஆம்பூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்