கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ள சிறுமலை கிராமத்தைச் சேர்ந்த 53 வயது சந்தானம் என்பவர் ஆடுகளை வளர்த்து அதை விற்று தனது குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். தினசரி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று மாலையில் கொண்டு வந்து ஆட்டுப்பட்டியில் அடைத்து வைத்து விடுவார். நேற்று வழக்கம்போல் மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிச் சென்றுவிட்டு மாலையில் கொண்டு வந்து பட்டியில் அடைத்துள்ளார்.
அன்று இரவு தெரு நாய்கள் கூட்டமாகச் சென்று பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளைக் கடிக்கத் தொடங்கியதும், ஆடுகளின் சத்தம் அதிகமாகக் கேட்கவே அதிர்ச்சியடைந்த சந்தானம் ஓடி வந்து பார்த்தபோது நாய்கள் ஆடுகளைக் கடித்துத் தின்று கொண்டிருந்தன. நாய்களைத் தடி கொண்டு விரட்டி அடித்துவிட்டு ஆடுகளைப் பார்த்தபோது கொடூரமான காயங்களுடன் சில ஆடுகள் துடிக்க, உடன் கால்நடை மருத்துவருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
அதன்பிறகு ஆடுகளை எண்ணிப் பார்த்தபோது நாய்கள் கடித்துக் குதறியதில் 12 ஆடுகளில் மூன்று ஆடுகள் படுகாயத்துடன் போராடிக் கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சந்தானம் அனைத்து ஆடுகளையும் ஒரு வண்டியில் அள்ளிப் போட்டுக்கொண்டு திட்டக்குடி காவல் நிலையத்திற்குச் சென்று புகார் செய்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் இது குறித்து விசாரணை நடத்துவதாகக் கூறியுள்ளனர். ஆடுகளை இழந்த சந்தானம் எனது குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவது என்று வேதனையுடன் தெரிவித்தார். இறந்த ஆடுகளை மருத்துவர்கள் பரிசோதனை செய்து அதன்பிறகு அடக்கம் செய்தனர்.