மன்னிப்பு கேட்டால் மட்டும் தவறில்லை என்று ஆகிவிடுமா என எஸ்.வி.சேகருக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இருந்த சமயத்தில் அவர் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர் ஒருவரின் தொடர் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அவருடைய கன்னங்களை தட்டிக் கொடுத்தது பரபரப்பானது. அந்த சமயத்தில் இது தொடர்பான பேச்சுகள், விவாதங்கள் எழுந்த நிலையில் நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார்.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு தகவல்களை ஃபேஸ்புக் வாயிலாகப் பகிர்ந்தது தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது புகார்கள் எழுந்ததோடு பெண்கள் அமைப்புகள் சார்பில் போராட்டங்களும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதேபோல் தேசியக்கொடியை அவமதித்தாகவும் வழக்கு தொடரப்பட்டது.
அமெரிக்கவாழ் தமிழர் ஒருவரின் முகநூல் பதிவைத்தான் தான் பகிர்ந்ததாகவும், இதற்காக நீதிமன்றத்தில் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாகவும் எஸ்.வி.சேகர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு மற்றும் தேசியக்கொடி அவமதிப்பு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவில் சர்ச்சைக்குரிய பதிவுகள் உடனடியாக நீக்கியதுடன் மன்னிப்பும் கோரி இருந்ததாக எஸ்.வி.சேகர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையில் 'தவறான அவதூறான கருத்தை கூறிவிட்டு உடனே மன்னிப்பு கூறினால் தனது செயல்பாடுகளில் தவறில்லை என்றாகி விடுமா என எஸ்.வி.சேகருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, இரு வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.