முன்னாள் முதலமைச்சரும், மண்ணின் மைந்தருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலை நகரில் குடும்பத்துடன் வசிக்கிறார். அவர் வசிக்கும் பகுதி, சேலம் மாநகராட்சியின் 23- வது வார்டு எல்லைக்குள் வருகிறது.
அந்த வார்டில் தி.மு.க. சார்பில் சிவகாமி அறிவழகன் போட்டியிட்டார். இதே வார்டில் அ.தி.மு.க. சார்பில் இந்திரா, பா.ம.க. சார்பில் ஜோதிபிரியா, பா.ஜ.க. சார்பில் பாலா ஆகியோர் களமிறங்கினர். இவர்கள் தவிர சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
வன்னியர், கவுண்டர், பட்டியல் சமூகத்தினர் பெரும்பான்யாக உள்ள இந்த வார்டில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மட்டுமே நேரடி போட்டி நிலவியது. எடப்பாடி பழனிசாமி வசிக்கும் பகுதி என்பதால், அ.தி.மு.க.வினர் கூடுதல் முக்கியத்துவம் அளித்து பரப்புரையிலும், பணப்பட்டுவாடாவிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (பிப். 22) வாக்கு எண்ணிக்கை நடந்தபோது, இந்த வார்டின் முடிவுகளைத் தெரிந்து கொள்வதில் தி.மு.க., அ.தி.மு.க. தொண்டர்கள் மட்டுமின்றி மக்களிடையேயும் ஆர்வம் காணப்பட்டது.
ஆனால் ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் சிவகாமி அறிவழகன் முன்னிலையில் இருந்தார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராவை விட 1366 வாக்குகள் அதிகமாக பெற்று, வெற்றி பெற்றார்.
எடப்பாடி பழனிசாமி வசிக்கும் பகுதியிலேயே வெற்றி வாகை சூடிய தி.மு.க. பெண் வேட்பாளர் சிவகாமி, கட்சியினர் மற்றும் மக்கள் மத்தியில் பெரிதும் கவனம் ஈர்த்துள்ளார்.