"விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்ற தேர்தல் பிரச்சார பயணத்திற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக கடலூர் அருகே உள்ள குறிஞ்சிப்பாடி ஒன்றிய பகுதியில் தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கான இடத்தை பார்வையிட்டுப் பேசிய உதயநிதி ஸ்டாலின், "மீண்டும் மருத்துவக் கல்லூரி வருமா முடக்கப்பட்ட திட்டம் முழுமை பெறுமா?" என கேள்வி எழுப்பியவர், "கண்டிப்பாக தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் மருத்துவக் கல்லூரி திட்டம் கடலூரில் முழுமை பெறும் வகையில் முடிக்கப்படும்" என்றார்.
அதைத் தொடர்ந்து ராமாபுரத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற உதயநிதி, "மூன்று வேளாண் மசோதா கொண்டு வந்த பா.ஜ.க. அரசு போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் உள்ளது. விமான நிலையங்கள் தனியார்மயம், ரயில்வே தனியார்மயம் போன்று விவசாயத்தையும் புதிய வேளாண் சட்டங்களால் தனியார்மயக் கொள்கையாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் வேளாண்மைத் துறை கார்ப்பரேட்டுகள் கையில் என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உள்ளது. முதலில், இதற்கு எதிராகப் பேசிய அ.தி.மு.க. தற்போது ஆதரவளிக்கிறது. டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு மேல் போராடி வரும் நிலையில் புதிய வேளாண்மை சட்டங்களால் எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறும் முதல்வர் பழனிசாமி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரா?" எனக் கேள்வி எழுப்பினார்.
இந்த நிகழ்ச்சிகளின்போது கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். தொடர்ந்து இன்றும், நாளையும் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, வடலூர், நெய்வேலி, விருத்தாச்சலம் ஆகிய பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.