நேற்று கடலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், 'தமிழ் ஒரு சனியன்' என பெரியார் பேசியதாக தெரிவித்திருந்தார். மேலும் 'பெரியாருக்கும் சீர்திருந்திற்கும் என்ன சம்பந்தம்' என பேசியிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை நீலாங்கரை பகுதியிலுள்ள சீமானின் வீட்டை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது அங்கு வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சீமான் வீட்டை முற்றுகையிட்ட போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக திமுக சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக சட்டத்துறை துணைச் செயலாளர் மருதுகணேஷ் புகார் அளித்துள்ளார். பெரியார் குறித்து சீமான் பேசிய வீடியோ ஆதாரத்துடன் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.