









சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் இன்று காலை காலமானார்.
அவருக்கு வயது 62. கடந்த 2- ஆம் தேதியன்று மூச்சுத் திணறலுடன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் கரோனா பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் இன்று காலை 8 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தி.நகரில் உள்ள வீட்டிற்கு ஜெ.அன்பழகனின் உடல் கொண்டு செல்லப்பட்டது. மகாலட்சுமி தெருவில் உள்ள வீட்டில் ஜெ.அன்பழகன் உடலுக்கு உறவினர்கள் மற்றும் தெரு மக்கள் அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து ஜெ.அன்பழகன் உடல் கண்ணம்மாப்பேட்டை மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இன்னும் சற்று நேரத்தில் ஜெ.அன்பழகன் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. தந்தை பழக்கடை ஜெயராமன் கல்லறை அருகில் ஜெ.அன்பழகன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.