Skip to main content

டாஸ்மாக் கடைகளில் தனி மனித இடவெளி பின்பற்றப்படுகிறதா? -கே.என்.நேரு தொடர்ந்த ‘கிராமசபை’ வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

dmk mla chennai high court

 

 

கிராமசபை கூட்டங்களைக் கூட்ட தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தி.மு.க. எம்.எல்.ஏ. நேரு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி, கிராமசபை கூட்டம் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த அக்டோபர் 2- ஆம் தேதி நடக்கவிருந்த கிராம சபை கூட்டங்கள், கரோனா தொற்றைக் காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டன. இதை எதிர்த்து, திமுக எம்.எல்.ஏ. நேரு, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

 

அந்த மனுவில், சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு தேசிய அளவில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியதால், சட்டங்களுக்கு எதிராக கிராமசபை கூட்டங்களில்  தீர்மானம் நிறைவேற்றும்படி  திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்ததால், தமிழக அரசு, கிராமசபை கூட்டங்களை ரத்து செய்துள்ளது. 

 

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளின்படி, ஆண்டுக்கு இரண்டு முறை கிராமசபை கூட்டங்கள் கூட்டப்பட வேண்டும் என்பதால், மூன்று வாரங்களில் கிராமசபை கூட்டங்கள் கூட்டப்படுவதை உறுதி செய்ய, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். கிராமசபை கூட்டங்களை ரத்து செய்த உத்தரவு சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.

 

இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, விதிகளின்படி கிராமசபை கூட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க,  கிராம சபை தலைவர்களுக்கு அதிகாரம் உள்ளதாக நேரு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.

 

அதேசமயம், நிகழ்ச்சி நிரல்களைத்  தீர்மானிக்க பஞ்சாயத்துகள் ஆய்வாளரான மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் உள்ளதாகவும், கரோனா தொற்று பரவல் காரணமாக கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், அரசுத்தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயண் வாதிட்டார்.

 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தனி மனித இடைவெளி காரணமாக கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது என்றால், டாஸ்மாக் கடைகளில் தனி மனித இடைவெளி பின்பற்றப்படுகிறதா? கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ரத்து செய்ய அதிகாரம் உள்ள நிலையில், குறிப்பிட்ட விவகாரம் பற்றி தீர்மானம் நிறைவேற்றக்கூடாது எனக் கூற அரசுக்கு எங்கே அதிகாரம் உள்ளது? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவுக்கு ஜனவரி 22- ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்