



புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ஜெயலெட்சுமி. கடந்த ஆண்டு இணைய வழி போட்டித் தேர்வு மூலம் நாசாவுக்கு செல்ல தேர்வாகி இருந்தார். ஆனால் அமெரிக்கா செல்ல பணமில்லை. இதையறிந்த பலரும் ஏழை மாணவிக்கு உதவிக்கரம் நீட்டினார்கள். அதேபோல 'கிராமாலயா' என்ற தொண்டு நிறுவனமும் மாணவிக்கு உதவிகள் செய்ய முன்வந்தபோது தனக்கு போதிய உதவிகள் கிடைத்துவிட்டதாக ஜெயலெட்சுமி சொல்ல, அப்படியானால் உங்கள் வீட்டில் கழிவறை இருக்கா? இல்லை என்றால் 'கிராமாலயா' கட்டித்தரும் என்றனர். இதைக் கேட்ட பள்ளி மாணவி ஜெயலெட்சுமி ''என் வீட்டில் மட்டுமல்ல எங்க ஊரிலேயே யார் வீட்டிலேயும் கழிவறை இல்லை. அதனால என்னைப் போன்ற பெண் குழந்தைகள் ரொம்பவே அவதிப்படுறோம். 2 கி.மீ தள்ளி இருக்கிற குளத்துக்கு போறதுக்கு டாஸ்மாக் கடைகளை கடந்து போகனும். இதுக்கு பயந்தே விடியறதுக்குள்ள போகனும். அப்பவும் அச்சமாக இருக்கும். விடிஞ்ச பிறகு வயசுப் பொண்ணுங்க வலியோட கஷ்டப்படுறாங்க அதனால எங்க ஊருல இருக்க எல்லாருக்கும் கழிவறை கட்டித் தருவீங்களா'' என்று கேட்டார்.
அசந்து போன 'கிராமாலயா' நிர்வாகிகள் உன் ஒருவருக்கு கிடைப்பதை ஊருக்கே பகிர்ந்து கொடுக்கும் பறந்த மனதை பாராட்டுகிறோம் என்று ஊருக்கே கழிவறைகள் கட்ட ஒத்துக் கொண்டனர். தொடர்ந்து ஒவ்வொரு வீடாக சென்று கழிவறைகளின் அசியம் குறித்து மாணவியும், கிராமாலயா நிர்வாகிகளும் எடுத்துக் கூறி 135 கழிவறைகளை கட்டியுள்ளனர். ஆனால் மாணவியின் கனவான நாசா போகும் திட்டம் கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டுவிட்டது.
கிராமத்து மாணவியின் இந்த கழிவறைத் திட்டம் குறித்து அறிந்து பலரும் பாராட்டி வரும் நிலையில், தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திமுக மகளிரணி மாநிலச் செயலாளர் கனிமொழி எம்.பி. மாணவி ஜெயலெட்சுமி வீட்டிற்குச் சென்று பழங்கள், புத்தகங்கள், சால்வை வழங்கி பாராட்டியதுடன் உனக்கு எப்படி இந்த திட்டம் தோன்றியது என்றெல்லாம் கேட்டறிந்து மீண்டும் பாராட்டியதுடன் மாணவியின் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் உரையாடினார். தொடர்ந்து குடும்பத்தினருடன் இணைந்து மாணவி வீட்டு வாசலில் மரக்கன்று நட்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது திமுக நிர்வாகிகள் மற்றும் ஊராட்சிமன்றத் தலைவர் ஆகியோர் உடனிருந்தனர். இது குறித்து மாணவி ஜெயலெட்சுமி கூறும் போது, ''கனிமொழி எம்.பி திடீர்னு வீட்டுக்கு வந்தாங்க. 2 கலைஞர் புத்தகம், 2 அப்துல் கலாம் புத்தகங்கள் கொடுத்தாங்க. கழிவறை கட்டும் யோசனை எப்படி வந்ததுன்னு கேட்டுட்டு பாராட்டினாங்க. அவங்க வந்தது நினைவாக மரக்கன்று நட்டோம். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது'' என்றார்.