2016 சட்டமன்ற தேர்தலின்போது திருப்பூரில் மூன்று கண்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் பணம் பிடிபட்டது தொடர்பான சிபிஐ விசாரணை அறிக்கையை தங்களுக்கு தர கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது.
2016ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது, 2016 ஆம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி திருப்பூர் அருகே 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட அதில் 570 கோடி ரூபாய் அளவிற்கு பணம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இது தொடர்பாக 18 மணி நேர விசாரணையின் பிறகு யாரும் உரிமை கோராததால், இதுதொடர்பாக வருமான வரித்துறை விசாரணைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது.
அதன்பின்னர் கண்டெய்னர் லாரிகளில் எடுத்துசெல்லப்பட்ட பணம் தங்களுடையதுதான் என்று ஸ்டேட் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அதிலிருந்த முத்திரைகள் ஆக்சிஸ் வங்கியுடையதாக இருந்ததால் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதன் அடிப்படையில் வருமான வரி விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் வழக்கு தொடர்ந்தார். அதில் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
2016 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பைய்யா அளித்த தீர்ப்பில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். அதன்படி விசாரித்த சிபிஐ காவல்துறையினர் இந்த வழக்கு ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பரிமாற்றம் செய்யும் நடைமுறை என கூறி புகாரை முடித்ததுடன், அதுதொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில் சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வழக்கின் மனுதாரர் என்ற அடிப்படையில் தங்களுக்கும் அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிபதி ஆர்.சுப்பைய்யா முன்பு ஆஜரான திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ப்பி.வில்சன் முறையீடு செய்தார்.
அந்த முறையீட்டை ஏற்று கொண்ட நீதிபதி, சிபிஐ விசாரணை கோரிய வழக்கை மீண்டும் பட்டியலிடுவதாகவும், பட்டியலில் வரும்பொழுது கோரிக்கைகளை முன்வைக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி இந்த வழக்கு அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு பட்டியலிட வாய்ப்புள்ளது.