கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்க பொதுமக்கள் வரிசையில் நின்றிருந்தனர். அப்போது வரிசையில் நின்ற பெண் ஒருவர் மீது மண்ணெண்ணெய் வாசனை அடிக்கவே, தகவலறிந்த போலீசார் அந்த பெண்ணை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் ஏற்கனவே தன்மீது மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு வரிசையில் நின்றிருந்தது தெரியவந்தது. போலீசார் முன்னெச்சரிக்கையாக அவர் மீது தண்ணீர் ஊற்றி சரி செய்தனர்.
பின்னர் விசாரித்ததில் அவர் கடலூர் அருகேயுள்ள செம்மங்குப்பத்தை சேர்ந்த வீரசேகர் மனைவி ராஜேஸ்வரி(45) என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை செய்ததில் செம்மங்குப்பத்தில் அவர்களுக்கு சொந்தமான 36 சென்ட் நிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பயிரிட்டு வருவதாகவும், சுப்புராயலு தெருவை சேர்ந்த செந்தில்குமார், சீனுவாசன் ஆகியோர் அவர்கள் நிலத்தை அளவீடு செய்த நிலையில், ராஜேஸ்வரி குடும்ப நிலத்தை அவர்களுடையது என்றதால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
அதையடுத்து வருவாய்த்துறையினர் மூலம் நில அளவை செய்தபோது அவர்களோ ராஜேஸ்வரி குடும்பத்தின் நிலம் என ரயில்வேத்துறைக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தை காட்டியுள்ளனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வந்த நிலம் தங்களுடையதில்லை என்று சொன்னதால் என்ன செய்வதுதென்று தெரியவில்லை என்றும் தங்கள் வாழ்வாதாரமான 36 சென்ட் நிலத்தை பெற்றுத்தர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதேபோல் மேற்கிருப்பு கிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்பவர் தனது வீட்டுமனை அளந்து கல் நடுதல் தொடர்பாக, மனு கொடுக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார். அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு திங்கள்கிழமை குறைதீர்வு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த அமுதா என்கிற பெண் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் நடந்தது.
இந்நிலையில் மனு கொடுக்க வருபவர்கள் தற்கொலை முயற்சிகளை தவிர்க்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வெண்டுகோள் விடுத்துள்ளார். அதில் பொதுமக்கள் கொடுக்கும் குறைகளுக்கு தீர்வுகாண மாவட்ட நிர்வாகம் முழு முயற்சிகளை மேற்கொள்கிறது. எனவே பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தற்கொலை முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என கேட்டுள்ளார்.
அதேசமயம் பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டாலும் அதிகாரிகளிடம் அலட்சியம் உள்ளது. குறிப்பாக நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவர், தாசில்தார் என அதிகாரிகளின் கூட்டு முயற்சி எடுத்து உடனுக்குடன் குறைகளை தீர்ப்பது அவசியம் என்பதை இந்த தற்கொலை முயற்சி சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. எனவே நிலம் அளவை, நிலம் அபகரிப்பு, பட்டா மாற்றம் போன்றவை தொடர்பாக வரும் மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் செலுத்தினால்தான் இதுபோன்ற தற்கொலை முயற்சிகளை தடுக்க முடியும்.