Skip to main content

ஊரணிக்கரையில் புத்த சமயச் சின்னமான தர்மசக்கரத் தூண் கண்டுபிடிப்பு

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

Discovery of the Dharmachakra Pillar, a Buddhist symbol, at Oranikarai.

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே புதுவாக்காடு ஊரணிக்கரையருகே நிலத்தை சீர் செய்யும் போது தர்மசக்கர புடைப்புச் சிற்பத்துடன் தூண்கல் வெளிப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் எக்ஸ்.எடிசன் மற்றும் புதுவாக்காடு கிராம இளைஞர்கள் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்திற்கு தகவலளித்தனர். தூண் புடைப்பு சிற்பம் புத்த சமயத்தில் மிக முக்கியச் சின்னமாகக் கருதப்படும் தர்மசக்கரம் என்பதை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தினர் வெளிப்படுத்தியுள்ளனர். 

 

இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறியதாவது, “தர்மசக்கரம் அல்லது அறவாழி என்பது புத்தம், சமணம் மற்றும் வைணவ மதங்களில் முக்கியச் சின்னமாக உள்ளது. தற்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ள தர்மசக்கரம் எட்டு ஆரங்களுடன் ஒரு தாங்கியில் வைக்கப்பட்டிருப்பது போல பொறிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தாங்கிப்பலகையில் சக்கரத்திற்கு அடிப்புறத்தில் தெளிவற்ற மான் உருவம் இருமருங்கிலும், மையத்தில் விளக்கு அமைப்பும் காட்டப்பட்டிருக்கிறது. இது புத்த தர்மசக்கரத்தோடு தொடர்புடையது என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. மேலும், சக்கரத்தின் மேற்புறமாக ஒரு ஒளிக்கீற்று காட்டப்பட்டிருக்கிறது. இது புத்தருக்கு காட்டப்படும் ஒரு முக்கியமான அடையாளமாகும். வைணவச் சக்கரங்களில் இந்த தீச்சுவாலை அமைப்பு மூன்று புறங்களில் காட்டப்படும். புடைப்பு சிற்பத்தில் மேற்புறம் மட்டும் காட்டப்பட்டிருப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த தூண் புடைப்பு சிற்பத்தில் தெளிவான கால வரையறையைக் கொண்ட எழுத்து பொறிப்புகள் ஏதுமில்லாவிட்டாலும், ஒன்பதாம் நூற்றாண்டு தொடங்கி பதினொன்றாம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டதாகக் கருதலாம். 

 

தர்மசக்கரத்தின் எட்டு ஆரங்கள் சொல்லும் தத்துவம் என்னவெனில், சரியான உயிரோட்டமான வாழ்க்கை, சரியான பார்வை, சரியான முயற்சி, சரியான கவனம், சரியான நோக்கம், சரியான நினைவாற்றல், சரியான செயல், சரியான பேச்சு என்பதாகும். புத்தர் முதன்முதலில் சாரநாத்தில் மான் பூங்காவில் ஐந்து துறவிகளுக்கு உபதேசம் செய்த நிகழ்ச்சி முதல் தர்மசக்கர சுழற்சியாக கொள்ளப்படுகிறது. இதைக் குறிக்கும் வகையிலே தர்மசக்கரத்தின் இருபுறமும் மான்கள் காணப்படுவதுண்டு. 

 

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தர்மசக்கரத் தூண் நீர் நிலைக்கு அருகில் கிடைத்துள்ளதால், மக்களுக்காக இந்நீர்நிலையை ஏற்படுத்தியவர்களால் நட்டுவிக்கப்பட்டிருக்கலாம் என்பதை அனுமானிக்க முடிகிறது. மேலும், இது போன்ற அடையாளத் தூண்கள் நிலங்களின் எல்லைகளைக் குறிப்பதற்கும், தாம் செய்வித்த பொதுப்பணியை எந்நோக்கத்திற்காகச் செய்தோம் என்பதை வெளிப்படுத்துவதற்காகவும் நட்டுவிக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது.  இது பௌத்த துறவிகள் அல்லது அந்த மதத்தைப் பின்பற்றியவர்கள் இப்பகுதியில் இருந்திருப்பதை உறுதி செய்வதாக இருக்கிறது.

 

கடற்கரை அருகிலான கிராமமாக இது இருப்பதோடு, ஆவுடையார்கோவில் பகுதியிலுள்ள கரூர் கிராமத்திலும், மணமேல்குடி அருகே வன்னிச்சிப்பட்டிணம் எனும் ஊரிலும் புதுக்கோட்டை வரலாற்று அறிஞர் ஜெ.ராஜாமுகமது அவர்களால் 25 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டு காணாமல் போன புத்தர் சிற்பம் கண்டறிந்த இடமும், கடலோர இலங்கைத்தீவும் அண்மைப் பகுதிகளாக இருப்பதால் பௌத்தம் இப்பகுதியில் பரவியிருந்ததை வெளிப்படுத்தும் சான்றாக இத்தூண் கண்டுபிடிப்பைக்  கருத முடிகிறது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்