தமிழகத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (06.05.2024) காலை 09.30 மணிக்கு வெளியாகி இருந்தது. தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரியில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்தனர்.
தொடர்ந்து இந்தப் பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான உடனடி மறுதேர்வு தொடர்பான அறிவிப்பு இன்று (07.05.2024) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக துணைத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணை தேர்வுக்கு வரும் மே 16ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்றும், தனித்தேர்வர்கள் மாவட்ட சேவை மையங்களுக்கு சென்றும் விண்ணப்பிக்கலாம். காலை 11:00 மணி முதல் மாலை 5 மணி வரை அவரவர் படித்த பள்ளிக்கு சென்று மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.