நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் அமோக வெற்றி பெற்றார். திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இத்தொகுதியை ஒதுக்கியதின் பேரில் வேட்பாளராக சச்சிதானந்தம் களமிறங்கினார்.
இதில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர்களின் தீவிர தேர்தல் பிரச்சாரத்துடன் கூட்டணி கட்சிகள் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள் தேர்தல் களத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்ததின் மூலம் 4,43,821 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெற்றதுடன் மட்டுமல்லாமல் தமிழகத்திலேயே மூன்றாவது இடத்தையும் சச்சிதானந்தம் பிடித்தார்.
அதுபோல் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கை தவிர பா.ம.க. வேட்பாளர் திலகபாமா, நாம் தமிழர் கட்சி உட்பட சுயேட்சைகள் டெபாசிட் இழந்தனர். அந்த அளவுக்கு இரண்டு அமைச்சர்கள் முயற்சியினால்தான் இப்படி ஒரு வெற்றியை பெற்று இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. அதைக்கண்டு சிபிஎம் கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் உட்பட பலரும் சிபிஎம் வேட்பாளரின் வெற்றிக்காக உறுதுணையாக இருந்த இரண்டு அமைச்சர்கள் உட்பட ஐ.பி.செந்தில்குமாரை பாராட்டினார்கள்.
இதைத் தொடர்ந்து அமைச்சர்களான ஐ.பெரியசாமி மற்றும் சக்கரபாணி, எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோர் வெற்றி பெற்ற சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினிடம் அழைத்துச் சென்று வாழ்த்து பெற்றனர். இதனையடுத்து அமைச்சர்கள் ஐ.பெரியசாமி மற்றும் சக்கரபாணி இருவருடன் சச்சிதானந்தம் இளைஞர் நலன், மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார். அப்போது, அமைச்சர் உதயநிதி சச்சிதானந்ததிற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.