Skip to main content

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை விவகாரம்; இந்து சமய அறநிலையத்துறை பதில் மனு

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

“Dikshithas no authority to change the practice of darshan of devotees in Kanakasabha” - Department of Hindu Religious Charities

 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் கனகசபையில் ஏறி வழிபடத் தமிழக அரசு சார்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர். ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்திருந்தார். மேலும் கோவிலில் பூஜை, அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெறுவதால், கனகசபைக்கு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தால் கோவில் கால வழிபாட்டில் இடையூறுகள் ஏற்படும் என்றும், இதன் மூலம் தீட்சிதர்களின் உரிமை பாதிக்கப்படுகிறது என்றும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

 

இது வழக்கு தொடர்பான முந்தைய விசாரணையின் போது, இது குறித்து விளக்கமளிக்க இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், “சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்டு பொது மக்களின் பங்களிப்புடன் நிர்வகிக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயில் ஒரு பொது கோயில் ஆகும். சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமில்லை என உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளன. கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நடைமுறை ஆண்டாண்டு காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த நிலையில் கொரானா ஊரடங்கு காரணமாக கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டது.

 

இதனையடுத்து கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நடைமுறைக்கு அனுமதி கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கனகசபையில் பக்தர்கள் ஏறி தரிசனம் செய்வது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் எனக் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி தான் பக்தர்கள் கனகசபையில் ஏறி வழிபடத் தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. எனவே சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் எறி பக்தர்கள் தரிசனம் செய்யும் நடைமுறையை மாற்றத் தீட்சிதர்களுக்கு அதிகாரமில்லை” எனப் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்