பல்கலைக்கழகத்தை காவிமயமாக்கவில்லை; கல்விமயமாக்கவே முயல்கிறோம் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாஜக நிறுவன நாளையொட்டி பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
மாற்றம் தேவையான நிலையில் தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்கிறார்கள். காவிரி விவகாரத்தில் நிச்சயமாக தமிழக உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் அதில் மாற்றுக்கருத்து இல்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் திமுகவால் மறுக்கப்பட்ட காவிரி பாஜக ஆட்சியில் தான் பாய்ந்தோடப் போகிறது. அதற்கு சில நாட்கள் அவகாசம் வேண்டும். எது எப்படி இருந்தாலும் தமிழக உரிமை மீட்டெடுக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் குழு, புதிய துணைவேந்தர் நியமனத்தை வரவேற்றுள்ளனர். திறமைகளின் அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்யப்படுகின்றனர். பல்கலைக்கழகத்தில் அரசியலை புகுத்தாதீர்கள். பல்கலைக்கழகத்தை காவிமயமாக்கவில்லை; கல்விமயமாக்கவே முயல்கிறோம். ஊழல் மயமாகிக்கொண்டிருந்த பல்கலைக்கழகங்களை கல்விமயமாக்கக் கூடிய முயற்சி தான் என அவர் கூறியுள்ளார்.