
தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தமிழக அரசின் உத்தரவையடுத்து 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். நீண்ட நாட்களாக சிறையில் இருப்போரை எம்ஜிஆர் நூற்றாண்டையொட்டி விடுதலை செய்ய ஆளுநரிடம் ஒப்புதல் கோரியிருந்தது தமிழக அரசு. தமிழக அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்ததையடுத்து 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
கொடைக்கானல் பிளசன்ட்ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். தருமபுரி அருகே இலக்கியம்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினல் வேளாண் கல்லூரி பேருந்தை எரித்தனர். பேருந்து எரிக்கப்பட்டத்தில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த வழக்கில் நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் 2007ம் ஆண்டு நெடுஞ்செழியன், மாது, முனியப்பனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.