உலக அளவில் குடிநீர் தட்டுப்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கடும் குடிநீர் பஞ்சத்தை சந்தித்துள்ளது தமிழ்நாட்டு மீனவ கிராமம் ஒன்று.
ராமநாதபுரம் தனுஷ்கோடி மீனவ கிராமத்தில் போதிய குடிநீர் வசதி இல்லாமல், கிராம மக்கள் ஊத்து என்னும் தண்ணீர் சேகரிக்கும் முறையையே நம்பி வாழ்ந்துவருகின்றனர். சுற்றியிருக்கும் மணல்மேடுகளில் ஈரப்பதம் நிறைந்த இடத்தைத் தேடிப் பிடித்து, ஆழம் தோண்டி, அதில் ஊற்றெடுக்கும் நீரை சேகரித்தால்தான் அன்றைய நாளுக்கான குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலையில் உள்ள அக்கிராம மக்கள், இதைவிட்டால் காசு கொடுத்துத்தான் தண்ணீரைப் பெற முடியும் எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
அப்படி ஊற்று ஊறினாலும் தண்ணீர் எடுப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. அகப்பையை வைத்து மணல் கலக்காமல் பொறுமையாக நீரை, தேனி தேன் சேகரிப்பது போல, குடத்தில் சேர்க்க வேண்டும். சில நேரங்களில் ஒரு குடம் நீரை சேகரிக்க ஒருமணி நேரம்கூட ஆகலாம் எனக்கூறும் அப்பகுதி பெண்கள், இதைவிட்டால் ஒரு குடம் நீரை 10 ரூபாய் கொடுத்துத்தான் வாங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தங்களது குடிநீர் பிரச்சனையைப் போக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர்.
''கண்ணுக்கெட்டியவரை கடல் நீர், ஆனால் குடிக்கத்தான் முடியவில்லை'' என்று மணலுக்குள் தண்ணீர் தேடுகிறது தனுஷ்கோடி...