Skip to main content

ரவுடிகளை ஒழிக்க தமிழகத்தில் புதிய சட்டம் கொண்டு வரப்படும்!- உயர்நீதிமன்றத்தில் டி.ஜி.பி. தகவல்!

Published on 02/10/2020 | Edited on 02/10/2020

 

dgp chennai high court

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.

 

ரவுடிகள் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு, ‘ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது. தூத்துக்குடியில் ரவுடியைப் பிடிக்க சென்றபோது உயிரிழந்த போலீஸ் சுப்ரமணியனின் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? இது போன்ற சம்பவங்களால் பாதிக்கப்படுவோர் குடும்பத்திற்கு அரசியல் கட்சிகள் உதவ வேண்டும்.

 

ரவுடிகள் இறக்க நேரிடும்போது காட்டப்படும் அக்கறையை, போலீசார் மீது மனித உரிமை ஆணையம் ஏன் காட்டுவதில்லை? ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். ரவுடிகளைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டி.ஜி.பி., இரண்டு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

 

இந்த வழக்கு, மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர், தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்ட வரைவு மசோதா, குழுவின் மூலம் தயாரிக்கப்பட்டு, தமிழக அரசுக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், புதிய  சட்ட வரைவு மசோதா எப்போது சட்டமன்றத்தில் முன் வைக்கப்பட உள்ளது என்பதற்கு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்