தேனி மாவட்டத்தில் புதிதாக உருவாக இருக்கும் சட்டக் கல்லூரிக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் அடிக்கல் நாட்டினார்.
தேனி மாவட்டத்தில் உள்ள போடி தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் வெற்றிபெற்ற உடனே தனது தொகுதிக்கு தேவையான திட்டங்களை கொண்டுவந்திருக்கிறார். ஏற்கனவே போடி அருகே பொறியியல் கல்லூரி மற்றும் கலை கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனது தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சட்டக் கல்லூரியையும் கொண்டுவர முடிவு செய்தார்.
அதனடிப்படையில் போடி தொகுதிகள் உள்ள தப்புகுண்டில் 89 கோடி மதிப்பீட்டில் புதிய சட்டக்கல்லூரி அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக அடிக்கல் நாட்டு விழா நேற்று பூமி பூஜையுடன் நடைபெற்றது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ்சுடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் ஓபிஎஸ் மகனும், தேனி பாராளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் ஆகியோர் கலந்து கொண்டு புதியதாக உருவாக இருக்கும் சட்டக் கல்லூரி பூமி பூஜையில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்கள்.
இந்த நிகழ்வில் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட செயலாளர் சையதுகான், மாவட்ட துணைச்செயலாளர் முறுக்கோடை ராமர், கம்பம் எம்எல்ஏ ஜக்கையன், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரீத்தாநடேசன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி. கணேசன், அரண்மனை சுப்பு உள்பட கட்சி பொறுப்பாளர்களும், அப்பகுதியிலுள்ள பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இப்படி கடந்த நான்கு வருடங்களில் துணை முதல்வர் ஓபிஎஸ் தொகுதியான போடி தொகுதிக்கு கூட்டுக் குடிநீர் திட்டம், மாணவர்களுக்காக கல்லூரிகள் உள்பட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததை கண்டு தொகுதி மக்களும் துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ பாராட்டி வருகிறார்கள்.