கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று டெல்டா மாவட்டத்தின் பொதுமக்களும் சுயமாக ஊரடங்கில் ஈடுபட்டதால், கடைவீதிகள், தெருக்கள், வயல்வெளிகள், என மொத்த நிலப்பரப்பும் வெறிச்சோடி கானப்பட்டது.
உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க நாட்டு மக்கள் சுய ஊரடங்கை ஏற்படுத்திக்கொண்டு மார்ச் 22ம் தேதி வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் மோடி மக்களிடையே வேண்டுகோள் வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தியா முழவதும் மக்கள் வீட்டில் முடங்கினர்.
அந்த வகையில் எப்பொழுதும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாகக் காணப்படும் நாகை துறைமுகமும் வெறிச்சோடியது. மீன் விற்பனை இல்லாததால் துறைமுகமே வெறிச்சோடி காணப்பட்டது. மீனவர்களின் ஆயிரக்கணக்கான பைபர் மற்றும் விசைப்படகுகளைக் கடற்கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன. பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் என எதுவும் இயங்காமல் புகையில்லாத காற்று வீசியது. பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி புழுதி பறந்து காணப்பட்டது. உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயமும், நாகூர் தர்காவும்கூட மக்கள் நடமாட்டம் இல்லாமல் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.
வேதாரண்யத்தில் உப்பு ஏற்றுமதி முடங்கியதால், 500 க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் வர்த்தகர்கள் தாங்களாகவே முன் வந்து ஒருநாள் முழுவதும் கடைகளை அடைத்தனர்.
திருவாரூரில் பேருந்துநிலையம், ரயில் நிலையங்களில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும், ஆனால் ஊரடங்கிக்கிடந்தது.
கிராமப்புற பொதுமக்கள் விடியற்காலை நான்கு மணிக்கே வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு, வீட்டில் சாவகாசமாக டீவி முன்பு அமர்ந்து சீரியலில் ஆழ்ந்தனர்.
மார்ச் 22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நல்ல முகூர்த்த தினம் என்பதால், இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பே நிச்சயிக்கப்பட்டு நடைபெற இருந்த திருமணங்கள் அனைத்துமே, ஆடம்பரமில்லாமலும் மக்கள்கூட்டம் இல்லாமல் நடந்து, திருமண வீட்டாரைச் சோகத்தில் உறைய செய்துள்ளது.
அதே போல் டெல்டா மாவட்டங்களில் கோடை சாகுபடி பணிகள் நடந்துவத்தது, பயறு எடுத்தல், நடவு நடுதல், பருத்தி போடுதல் என பல வேலைகள் நேற்று வரை ஜரூராக நடத்தது. இன்று வயல்கள் முழுவதும் ஆள் அரவமே இல்லாமல் இருக்கிறது.
மொத்தத்தில் கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் சிறப்பான பந்த் செய்துள்ளது.