Skip to main content

அடுத்த போராட்டம் இதுதான்... அதற்கு பிறகாவது மோடிக்கு இறக்கம் வந்து காப்பாற்றட்டும்... டெல்லியில் தமிழக விவசாயிகள் பேட்டி

Published on 30/11/2018 | Edited on 30/11/2018

 

 

farmer



ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 29 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் நேற்றும், இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று ராம்லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்லும் போராட்டம் நடைப்பெற்றது. இந்த பேரணியை தடுப்பதற்கு போலீசார் ஏராளமான பேரிகார்டுகளை வைத்து தடுத்தினர். இருப்பினும் விவசாயிகள் அதனையும் தாண்டி பேரணியாக சென்றனர்.  
 

தொடர்ந்து பேரணியாக வந்த விவசாயிகளை ஜந்தர் மந்தரில் போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கேயே விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

 

Farmer



தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சென்ற தமிழக விவசாயிகள் அரை நிர்வாணமாக இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். 
 

போலீசார் தடுத்து நிறுத்தியதால் தமிழக விவசாயிகள் திடீரென ஐந்து பேர் நிர்வாண போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
 

நிர்வாணப் போராட்டம் குறித்து முசிறியைச் சேர்ந்த செல்லப்பெருமாள் கூறுகையில், கடந்த முறை 144 நாட்கள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தினோம். ஒரு நாள் கூட பிரதமர் மோடி எங்களை சந்திக்க வரவில்லை. எங்கள் கோரிக்கைகளை பற்றி கேட்கவில்லை. 
 

1960ல் மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டது. அப்போது 800க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். அப்படி தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எலும்பு கூடுகளைத்தான் நாங்கள் இப்போது எடுத்து வந்திருக்கிறோம். 

 

Farmer


 

நேற்று நாங்கள் டெல்லி வந்து இறங்கியவுடனேயே போலீசார் எங்களை தடுத்தனர். இருந்தாலும் அதனையும் மீறி நாங்கள் ரயில் மறியல் செய்தோம். பிரதமரானால் நதிகளை இணைத்து விவசாயிகளுக்கு மறுவாழ்வு கொடுப்பேன் என்றார். பிரதமர் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது. ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்றார். போட்டாரா? 
 

நாங்கள் கேட்பது நதிகளை இணைக்க வேண்டும். எங்களது விவசாய பொருட்களுக்கு நியாயமான விலை கொடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட நியாயமான ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்துகிறோம் என்றார். 

 

Farmer


திருச்சியைச் சேர்ந்த ஜான் மைக்கேல் ராஜ், ஏற்கனவே விவசாயிகள் ஒன்றுமே இல்லாமல் இருக்கிறார்கள். அவன் வாங்கிய கடனுக்காக வங்கிகள் அவனுடைய சட்டை, வேட்டியை அவிழ்த்துவிட்டது. இப்போது டெல்லியில் போராட்டம் நடத்தி பிரதமர் மோடியிடம், கார்ப்பரேட் கம்பெனிக்கெல்லாம் கடனை தள்ளுபடி செய்கிறீர்கள். எங்களுக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இங்கு வந்தால் போலீசார் கெடுபிடி பண்ணுகிறார்கள்.
 

எல்லாத்தையும் இழந்த விவசாயி கோவணத்தையும் இழந்துவிட்டான். வேறு வழியே இல்லை. இதற்கும் செவி சாய்க்கவில்லை என்றால் கும்பல் கும்பலாக தற்கொலை செய்வோம். அதற்கு பிறகாவது பிரதமர் மோடிக்கு இறக்கம் வந்து விவசாயிகளை காப்பாற்றட்டும். எங்களின் கோரிக்கைகளில் முக்கியமானவை இரண்டு. விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதுதான். இதற்காகத்தான் 29 மாநில விவசாயிகளும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துகிறோம் என்றார். 

 

 




 

சார்ந்த செய்திகள்