கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவை வழங்க உத்தரவிடக் கோரி சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்ஷன் குரூப் என்ற அமைப்பின் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசிக்க அறிவுறுத்தியிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அரசு தலைமை வழக்கறிஞர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நடத்திய கூட்டத்தில், இரண்டு வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சத்துணவு மையங்களில் சமைக்கப்பட்டு மதிய உணவு அவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்குவது என முடிவெடுத்துள்ளதாகவும், இது 15 நாட்களுக்குள் செயல்படுத்தப்பட உள்ளதாக அரசு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார். மற்ற மாணவர்களை பொறுத்தவரை, செப்டம்பர் 1ம் தேதி முதல் அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய அங்கன்வாடி மையங்களின் மூலம் உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளாதாகவும் தெரிவித்தார்.
தமிழக அரசும், இதுதொடர்பான கடிதத்தை தாக்கல் செய்தது. இதையடுத்து சத்துணவுத் திட்டத்தின் மூலம் மீண்டும் உணவு வழங்குவதை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மீண்டும் எப்படி அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.