காலநிலை மாற்றத்தின் வேகம் அதிகரிப்பதற்கு புவியிலிருந்து மாசுக்காற்று அதிக அளவில் வெளியேற்றப்படுவது தான் காரணம். புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்காக மாசுக்காற்றையும் குறைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக அளவில் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட கரிம வாயுக்களின் வெளியேற்றம் இன்று வரை கட்டுப்படுத்தப்படாததால், 2023 முதல் 2027 வரையிலான ஐந்தாண்டுகளில் புவி வெப்பநிலை அபாய கட்டத்தை தாண்டிவிடும் என்று உலக வானிலையியல் நிறுவனம் எச்சரித்திருக்கிறது. பேரழிவிலிருந்து உலகைக் காக்க புவிவெப்பநிலை உயர்வை 1.5 டிகிரிக்கு கட்டுப்படுத்த வேண்டும் என்று சுற்றுசூழல் அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், அதை உலகம் செவிமடுக்க மறுப்பது கவலை அளிக்கிறது.
உலகின் சுற்றுச்சூழல் நிலை குறித்த புதிய ஆராய்ச்சி அறிக்கையை (State of the Global Climate 2023) ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கமான உலக வானிலை நிறுவனம் (World Meteorological Organization) வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் தலைவர் பெட்டேரி தலாஸ் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், உலகில் நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட படிம எரிபொருட்களின் (Fossil) பயன்பாடு குறையவில்லை என்பதாலும், கிழக்கு பசுபிக் பெருங்கடலில் வழக்கத்திற்கு மாறாக கடல் நீர் வெப்பமாகும் எல்நினோ (El Nino) உருவாகும் என்பதாலும் 2023 முதல் 2027 வரையிலான ஐந்தாண்டுகள் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் மிகுந்தவையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
2023-27 காலத்தில் உலகின் சராசரி வெப்பநிலை, தொழில்புரட்சி காலத்திற்கு முன்பிருந்த (Pre-industrial levels) காலத்தின் சராசரி வெப்பநிலையை விட 1.1 டிகிரி முதல் 1.8 டிகிரி வரை அதிகமாக இருக்கக் கூடும். இக்காலத்தில் ஏதேனும் ஒரு சூழலில் புவிவெப்பநிலை, பாரீஸ் உடன்படிக்கையில் அபாய கட்டமாக அறிவிக்கப்பட்ட 1.5 டிகிரியை தாண்டக்கூடும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. வெப்பநிலை உயர்வு 1.5 டிகிரியை தாண்டினாலும் அது தற்காலிகமானதாகவே இருக்கும்; ஆனால், அடிக்கடி வெப்பநிலை உயர்வு அபாய கட்டத்தை தாண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இவை அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் ஆகும்.
கடந்த காலங்களில் 2016-ஆம் ஆண்டு தான் உலகின் மிக வெப்பமான ஆண்டாக இருந்தது. ஆனால், 2027-ஆம் ஆண்டுக்குள் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுவிடும். நடப்பாண்டிலேயே எல்நினோ ஏற்பட வாய்ப்பிருப்பதால் 2024-ஆம் ஆண்டு உலகின் மிக வெப்பமான ஆண்டாக அமைய வாய்ப்புள்ளது.
புவிவெப்பநிலை உயர்வால் சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் ஆகியவற்றில் மிக மோசமான தாக்கங்கள் ஏற்படக்கூடும். புவிவெப்பநிலை ஒரு பக்கம் உயர்வதுடன், மறுபக்கம் மனிதர்கள் மற்றும் தொழிற்சாலை செயல்பாடுகளால் பசுமை இல்ல வாயுக்களும் மிக அதிக அளவில் வெளியேறுகின்றன. அதனால், கடல் வெப்பமயமாதல் மற்றும் அமிலமயமாதல், பனிப்பாறை உருகுதல், கடல் மட்டம் உயருதல் போன்றவையும் நிகழக்கூடும். அவை நிகழ்ந்தால் பேரழிவுகள் ஏற்படக்கூடும்.
காலநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமயமாதல் குறித்து ஐ.நா சுற்றுசூழல் அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் உலக நாடுகளை எச்சரித்து வருகின்றன. புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்காகத் தான் 1992-ஆம் ஆண்டிலேயே காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா.காலநிலை மாற்ற பணித்திட்டப் பேரவை (United Nations Framework Convention on Climate Change) என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் சார்பில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஆண்டுதோறும் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 2015ஆம் ஆண்டு பாரீஸ் நகரில் நடத்தப்பட்ட 21-ஆவது மாநாட்டில் (Conference of the Parties -COP- 21) புவிவெப்பநிலை உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. அதன்பின் 8 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. அதன்பின் 6 காலநிலை மாநாடுகள் நடத்தப்பட்டு விட்டன. 28-ஆவது காலநிலை மாநாடு துபாயில் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. ஆனால், புவிவெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான இலக்குகளை எட்டுவதற்கான கருத்தொற்றுமை எட்டப்படவில்லை. பசுமை இல்ல வாயுக்களை (Greenhouse gas emissions) கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உலகின் பெரும்பான்மையான வளர்ந்த நாடுகளில் இன்னும் தொடங்கப்படவில்லை.
உலகின் சராசரி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டும் தான் புவி வெப்பமயமாதலின் தீய விளைவுகளைச் சமாளிக்க முடியும். இதற்கான நடவடிக்கைகளை 2030ஆம் ஆண்டுக்குள் செய்து முடிக்க வேண்டும். அதற்கு இன்னும் 7 ஆண்டுகளே இருப்பதால் புவி வெப்பமயமாதல் தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் விரைவுபடுத்த வேண்டும். காலநிலை மாற்றத்தின் வேகம் அதிகரிப்பதற்கு புவியிலிருந்து மாசுக்காற்று அதிக அளவில் வெளியேற்றப்படுவது தான் காரணம். புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்காக மாசுக்காற்றையும் குறைக்க வேண்டும்.
காலநிலை மாற்றத்திற்கு வளர்ந்த நாடுகள் தான் காரணம். இதில் நமக்கு பங்கில்லை என்று கூறி இந்தியா ஒதுங்கியிருந்து விட முடியாது. கடந்த 10 ஆண்டுகளில் வெளியான மாசுக்காற்றில் 55% அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவை ஆகும். அதனால், மாசுக்காற்றை கட்டுப்படுத்தும் பெரும் பொறுப்பு இந்தியாவுக்கும் உண்டு; இந்தியாவில் தமிழகத்திற்கு கூடுதல் பொறுப்பு உண்டு. ஆனால், மத்திய, மாநில அரசுகள் அதை உணரவில்லை. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் சுற்றுச்சூழலை அதிக அளவில் மாசுபடுத்தும் நிலக்கரியை எரிபொருளாகக் கொண்ட அனல் மின்நிலையங்கள் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்படுவதே இதற்கு சான்று. புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகளை கருத்தில் கொண்டு, புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த கரிமவாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.