புதுச்சேரி கூனிச்சம்பட்டு பகுதியில் கோவிலுக்குள் நுழைந்த தலித் பெண்ணை அங்கிருப்பவர்கள் வெளியேற்றும் காட்சி சமூகவலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன், கூனிச்சம்பட்டு பகுதியை சார்ந்த ராதா என்பவர் தலித் இனத்தை சேர்ந்தபெண். இந்தப் பெண் கூனிச்சம்பட்டு கிராமத்தில் உள்ள துரோபதி அம்மன் கோவிலுக்கு நேற்று முன்தினம் சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சிலர், இங்கு வந்து சாமி கும்பிடக் கூடாது என்றும், உங்கள் கோவிலுக்குள் வருகிறோமா... ஏன் எங்கள் கோவிலுக்கு வருகின்றாய்? என்று கேட்க, "ஏன் நான் சாமி கும்பிட வரக்கூடாது? " என்று அந்தப் பெண் எதிர்கேள்வி கேட்கின்றார்.
இதனையடுத்து அவர்கள், கோவிலிலிருந்து அந்தப் பெண்ணை வெளியேறச் சொல்கின்றனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் வருகின்றது. தொடர்ந்து ஒரு பெண், அந்தப் பெண்ணைப் பிடித்து இழுக்கின்றார். "என்னை இழுக்கக்கூடாது, சாமி கும்பிட்டு விட்டு செல்கின்றேன்" என்று மீண்டும் கூறியபோது, அங்கிருந்த ஆண்கள் அவரை உடனடியாக வெளியேறச் சொல்கின்றனர். அவரை வலுக்கட்டாயமாக வெளியேறச் சொல்வதால் வேறு வழியில்லாமல் செல்கின்றார்.
ஒரே கிராமத்தை சார்ந்தவர்கள் கோயிலில் சாமி கும்பிட சென்ற போது கோவிலினுள் அனுமதிக்காமல் வெளியேற்றிய நிகழ்வானது சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.