Skip to main content

போராட்டம் நடத்திய விவசாயிகளை துரத்தி துரத்தி தடியடி நடத்திய கடலூர் போலீஸ்!

Published on 27/08/2018 | Edited on 27/08/2018
p

 

காவிரி நீரை கடலுக்கு அனுப்பியது, குடிமராமத்து பணியில் ஊழல் முறைகேடுகளை தட்டிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க தலைவர்களை காவல்துறையினர் துரத்தி துரத்தி தடியடி நடத்தி தாக்குதல் நடத்தினர்.

 

                கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காவிரிதண்ணீரை கடைமடைக்கு அனுப்பாமல் கடலுக்கு அனுப்பியதை கண்டித்தும் , காட்டுமன்னார் கோவில் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள், பாசனவாய்க்கால்வாய்களை குடிமராமத்து பணிகளில்  முழுமையாக தூர்வாராமல் ஊழல் முறைகேடு நடந்துள்ளதை தட்டிகேட்டு சிதம்பரம் பொதுப்பணித்துறைஅதிகாரிகள் மற்றும் தமிழக அரசை கண்டித்து காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.

 

இதனைதொடர்ந்து திங்கள்கிழமை தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் விவசாய சங்கத்தினர் மற்றும் தொழிலாளர் சங்கத்தை சார்ந்தவர்கள் உள்ளிட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் காட்டுமன்னார்கோவில் பேருந்துநிலையத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை கோஷம் எழுப்பியவாறு பேரணியாக வந்தனர்.

 

p

 

 பேரணியில் வந்தவர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில்அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். காட்டுமன்னார்கோவில் காவல்துறையினர் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறினார்கள்.  இதனால் போராட்டகாரர்களுக்கும் காவல்துறையினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் உதவி ஆய்வாளர் சிவராமன்  மற்றும் காவல்துறையினர் தடியை கொண்டு திடீர் தாக்குதல் நடத்தினார்கள். போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் தாக்குதலுக்கு பயந்து அங்குமிங்கும் ஓடினார்கள். ஓடியவர்களையும் விடாமல் குற்றவாளிகளை துரத்துவது போல் காவல் துறையினர் துரத்தி துரத்தி தடியடி தாக்குதல் நடத்தினார்கள்.

 

காவல்துறையினர் விவசாய சங்க தலைவர் மாதவன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டவர்களை சட்டையை பிடித்து தரதரவென இழுத்தும் குண்டுகட்டாக தூக்கியும் வேனில் ஏற்றினார்கள். இதனால் காவல்துறையினருக்கும் விவசாய சங்க தலைவர்களுக்கும் கடுமையன வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவல் துறையினரை கண்டித்து கோசங்களை எழுப்பினார்கள். பின்னர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

 

காவல்துறையினரின் காட்டுமிராண்டி தாக்குதலை கண்டித்து கைது செய்யப்பட்ட விவசாய சங்கதலைவர்கள் மற்றும் விவசாயிகள் மதிய உணவு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் ஷியாம்சுந்தர் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுகொண்டு இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காது என்று கூறினார். இதனை தொடர்ந்து அனைவரும் உன்னாவிரதத்தை கைவிட்டனர். மாலையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

 

சார்ந்த செய்திகள்