கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு - வடலூர் இடையே உள்ள பின்னலூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் அமிர்தவல்லி (வயது 50). இவர் தனது மகள் வழி பேரனுடன் தனித்து வசித்து வருகிறார். இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று அமிர்தவல்லி வீட்டைப் பூட்டி சாவியை பேரனிடம் கொடுத்து பத்திரமாக வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு வடலூரில் நடைபெற்ற வாரச் சந்தைக்கு காய்கறி வாங்கி வருவதற்காகச் சென்றுள்ளார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் அமிர்தவல்லி வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரம் கழித்து அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த சிறுவனிடம், “உனது பாட்டி என்னிடம் பணம் கடன் வாங்கி இருந்தார். எனக்குக் கொடுக்க வேண்டிய அந்தப் பணம் வீட்டிலுள்ள பீரோவில் இருக்கிறது. அதைத் திறந்து எடுத்துக் கொள்ளுமாறு உன் பாட்டி என்னிடம் கூறிவிட்டு சந்தைக்குச் சென்றுள்ளார்” என்று மர்ம நபர் கூறியதை உண்மை என நம்பிய சிறுவன் வீட்டைத் திறந்ததோடு தன்னிடம் இருந்து பீரோ சாவியையும் கொடுத்துள்ளான்.
இதைப் பயன்படுத்திக் கொண்ட அந்த மர்ம நபர் பீரோவில் அமிர்தவல்லி வைத்திருந்த இருந்த மூன்று பவுன் நகையைத் திருடிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். சந்தைக்குச் சென்ற அமிர்தவல்லி சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்துள்ளார். அவரிடம் ஒன்றும் அறியாத பேரன் நடந்த சம்பவங்களைக் கூறியுள்ளார். விவரமறியா சிறுவனை ஏமாற்றி நகையைத் திருடிச் சென்றதை அறிந்த அமிர்தவல்லி திருடனைக் கண்டுபிடிக்கக் கோரி சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை ஏமாற்றி நகையைத் திருடிச் சென்ற திருடனைக் கண்டுபிடிப்பதற்காக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் மர்ம திருடன் உருவ அமைப்பு குறித்தும் சிறுவனிடம் விசாரித்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.